சப்த விடங்க தலங்கள்: திருவாரூர் பகுதி 2

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.



திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் பெருமாள் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் (சப்தவிடங்க தலங்கள்) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.


இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.


அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.


திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் (திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது) என பெயர் பெற்றது.



வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.


திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.


திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோயில் வரலாறு


இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும்.


சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.


சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.


திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.


தல சிறப்புக்கள்



  • பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.

  • ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும்.

  • திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

  • தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

  • நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.

  • எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .

  • சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.

  • நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

  • கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

  • நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

  • பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

  • திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

  • இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.

  • 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.


திருவாரூர் கோயில் தேர் திருவிழா


திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.


அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.


அமைவிடம்


மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது


நாளை  திருநள்ளாறு - நாகவிடங்கர்   கோயில் தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்