சப்த விடங்க தலங்கள் திருக்காராயில் - ஆதிவிடங்கர் பகுதி 2

சப்த விடங்க தலங்கள் திருக்காராயில் - ஆதிவிடங்கர் பகுதி  2


சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 


இத்தலத்தில் இறைவன் கபால முனிவருக்குக் காட்சி தந்தார் என்பதும் பதஞ்சலிக்கு எழு வகைத் தாண்டவங்களையும் காட்டினார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.


மேலும் இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வர கண் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.


இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.


இத்தலத்தில் சிவபெருமான் “குக்குட நடனம்” ஆடித் தரிசனம் தருகிறார். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.


இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “ஞான தெட்சிணாமூர்த்தியாக” அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.


புராண காலத்தில் இத்தலம் முழுவதும் “காரகில்” எனும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. எனவே “திருக்காரகில்” என வழங்கப்பட்டு அதுவே “திருக்காரவாசல்” என பெயர் மருவியது.


பக்தி இலக்கியங்களில் 'காறை' எனக் குறிப்பிடப்படுவது இவ்வூரே ஆகும்.


சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலம் ஆதிவிடங்கத் தலம்.


இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்தக் கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது.


இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது.


ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகிவந்தால் தீராத நோய்களும், முக்கியமாக சரும நோய்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகரான கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.

மூலவர் கண்ணாயிரநாதர்
அம்மன் கைலாச நாயகி
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்காறாயில், திருக்காறைவாசல்
ஊர் திருக்காரவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

இத்தலத்து விநாயகர், கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு.


வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும்போது, இங்குள்ள சேஷ தீர்த்தங்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன.


அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து, விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன் வந்து, மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றே கடுக்காய் இருக்கிறது என்று பதில் கூறினான்.


விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அவற்றில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான்.


ஏதோ தெய்வ குற்றம் செய்துவிட்டோம் என்று உணர்ந்த அவன், இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து, கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள்புரிந்தார்.


அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன், இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இவர் சந்நிதி பிரம்ம தீர்த்தங்கரையில் உள்ளது.


திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம், இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்தை உள்ளன்போடு பாடி வருபவர்களின் வினைகள் யாவும் நீங்கிவிடும் என்று சம்பந்தர் தனது பதிகத்தின் பல பாடல்களில் தெரிவிக்கறார்.


சிறப்புக்கள் :

சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார்.


தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது.


சப்த விடங்கத் தலம். திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும்..


தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.


ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது.


அமைவிடம் மாநிலம் : 


தமிழ் நாடு திருவாரூர் . திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.


பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிக்காடு ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 


நாளை திருக்குவளையில் அவனி விடங்கர்  கோயில்  தொடரும்.

 
இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

 தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்