விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு.. வீட்டிலேயே கொண்டாடலாம்விநாயகர் சதுர்த்தி விரதம்.


ஆவணி மாதம் வரும் 'வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும்.


எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.


எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.


விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையை பெறலாம்.


கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.


மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம்.


விரதமிருக்கும் முறை : 


விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


சூரியன் உதிக்கும் முன் பால் பழம் அருந்தி, மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.


விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையை தொடங்க வேண்டும்.


அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.


இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி வீட்டிலே கொண்டாடப்பட உள்ளதால், மாலை விநாயகருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம்.


விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல் மிகவும் நல்லது.


பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.


தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது


கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.


சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.


சதுர்த்தி திதியில் ஜாதகத்தில் திருமணத் தடை உள்ள பெண்கள் இவ்விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.


விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.


பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.ஓம் ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்:

🌷 வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு


🌷பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா


🌷ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே


🌷விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!


நைவேத்தியம் :


இந்த விரதத்தின்போது செய்யும் பூஜை படையலில் நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.


நன்மைகள் :


விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும்.


அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர்.


அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள் நீங்கும்.


வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.


வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும்.


வாழ்வில் செல்வ செழிப்பு சேர,  துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை விரதமிருந்து வழிபடுங்கள்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


அன்புடன் பிரியா