பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது
பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
நீரிழிவு
இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட, இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள விட்டமின் - பி மற்றும் அமினோ அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அந்த வகையில், நாம் கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் சக்தி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
நரம்பு மண்டலம்
கருப்பட்டியில் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதில் பொட்டாசியம் நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது.
எலும்புகள்
நமது எலும்புகள் வலுவாக இருந்தால் தான், நமது உடல் எப்படிப்பட்ட கடினமான வேலையையும் செய்ய ஒத்துழைக்கும். அந்த வகையில் நாம் கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது எலும்புகளை இது வலுவாக்க உதவுகிறது.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
பெண்களுக்கு கருப்பட்டி
குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
எனவே இவ்வளவு நன்மைகள் தரும் கருப்பட்டியை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா