தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டும் இன்னும் அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவில்லை.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குளத்திற்குள் கட்டப்படுவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறிப்பிட்ட சிலரின் ஆதாயத்துக்காக விளைநிலங்கள், குளங்கள் உள்ள பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான தென்காசி, கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் பச்சை வண்ணம் படர்ந்த வயல்களை காண முடியும். ரம்மியமான தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் நீர் வீழ்ச்சி உள்ளதால் இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக ஆயிரப் பேரியில் தேர்வு செய்யப்பட்ட 28 ஏக்கரில் பெரிய குளம், கண்டுகொண்டான் மாணிக்ககுளம் ஆகிய இரண்டு குளங்கள் உள்ளதாகவும் இந்த குளத்திற்கு வரக்கூடிய நீர்வழித்தடத்தை அடைத்து கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் அரசு அவசரம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்காசியில் இருந்து ஆயிரப்பேரிக்கு வரும் சாலையில் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளதாகவும் அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக விவகாரத்தில் சட்டரீதியாகவும், களத்திலும் தனது போராட்டங்கள் தொடரும் என கூறும் பூங்கோதை ஆலடி அருணா, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தென்காசி நகரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாக பட்டியலிடுகிறார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விவகாரத்தில் தொடர்ந்து களத்திலும், சட்டரீதியாகவும் போராட்டம் நடத்த உள்ளதாக பூங்கோதை தெரிவித்துள்ளார்.