விநாயகர் சதுர்த்தி- சுவையான கொழுக்கட்டை செய்யலாம் வாங்க
விநாயகர் சதுர்த்தி - கொழுக்கட்டை செய்வது எப்படி
அரசமரம், வன்னிமரம் என மரத்தடியில் குடி கொண்டிருப்பவர் விநாயகர். முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான விழா விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை ஆவணி மாதம் 6ஆம் தேதி ஆகஸ்ட் 22ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை எப்படி சுவையாக செய்வது? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி 1 ஆழாக்கு
புழுங்கல் அரிசி 1 ஆழாக்கு
வெல்லம்
ஏலக்காய்
தேங்காய்
உப்பு
செய்முறை :
கொழுக்கட்டை மாவு :
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீரை வடித்து ஒரு உலர்ந்த துணியில் காய விடவும்.
சிறிது காய்ந்ததும் மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் மாவினை போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும்.
வறுத்தெடுக்கும்போது மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின் மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும்.
பூரணக்கலவை :
முதலில் தேங்காயை துருவி கொள்ளவும். வெல்லத்தை பொடியாக தட்டி கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும் அல்லது இடித்து கொள்ளவும்.
பின் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு சேர கலக்கவும். இப்பொழுது பூரணக்கலவை தயார்.
கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி?
முதலில் செய்து வைத்த கொழுக்கட்டை மாவில் உப்பினை கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து கொழுக்கட்டை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.
பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்து அதில் சிறிதளவு பூரணக்கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.
திரட்டும்போது பூரணக்கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்தபின் இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
விநாயகருக்கு பிடித்த சுவையான கொழுக்கட்டை தயார்.
விநாயகர் சதுர்த்தியான நாளை உங்களது வீட்டில் கொழுக்கட்டைகளை செய்து அனைவரையும் அசத்திடுங்கள்..
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா