பஞ்சபூதத் தலங்கள் நீர்த்தலம் திருவானைக்கோவில்
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிராகாரங்களும் உடையது.
மூலவர் ஜம்புகேஸ்வரர், ஐந்தாம் உள்பிராகாரத்தில் அப்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சந்நிதியிலுள்ள 9 துளை சாளரம் வழியே இறைவனை தரிசித்தால், ஒன்பது தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இந்த துவாரங்கள் வழியே இறைவனை தரிசிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வாலயத்தில் உள்ள ஆதி ஜம்புகேஸ்வரர் சந்நிதியும், குபேரலிங்கம் சந்நிதியும் பார்த்து தரிசிக்க வேண்டியவை. இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்றாகும்.
இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர சகல தோஷங்கள் நீங்கும். திருமணத் நடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்
கல்வெட்டுகள்
பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.
அரசர்/ சான்றோர் திருத்தொண்டு
இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டும் அன்றி, போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
- ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களை செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள்.
- நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளச் செய்துள்ளார்.
- சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.
- முதற் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர்.
- சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.
- வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.
- விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.
- பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.
- பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர்.
- திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 7 பதிகங்கள் உள்ளன.
இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - (4-வது பாடலில்) தெரிவிக்கிறார்.
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
இப்பாடலின் பொழிப்புரை
திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த - சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான்- என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்.
திருவானைக்கா, திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன.
இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நாளை வாயு ஆலயம் தொடரும்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம் - சிவமே அன்பு
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்