சென்னை நகரம் இன்று தனது 381வது பிறந்த நாள்


சென்னை நகரம் 1639ல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி பிறந்தது. மெட்ராஸ் நிறுவப்பட்டதை நினைவு கூறும் நாள்.


சென்னைப்பட்டினம், மதராசபட்டினம் என்றும், பின்னர் மெட்ராஸ் என்றும் தற்போது சென்னை என்றும் அழைக்கப்படும் அலுப்புதட்டா தூங்கா மாநகரம்.


சென்னை நகரம் இன்று தனது 381வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.


கம கமக்கும் காபியில் இருந்து,ஆன்மீக ஸ்தலங்கள், கர்நாடகா இசைக் கச்சேரி, பரத நாட்டியம், கடற்கரை சுண்டல், தென்னிந்திய உணவு, ஐஐடி சென்னை, அண்ணா பல்கலைக் கழகம், அழகான கடற்கரை, சினிமா தலைநகரம் என்று உறங்காமல் உழைத்துக் கொண்டு இருக்கும் மாநகரம்.


இந்தியாவில் இன்று ஆறாவது பெரிய நகரமாக சிறப்புகளை பெற்று கோலோச்சி வருகிறது.


தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாக சென்னை நகரம் திகழுகிறது. தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தை அப்போது கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் வாங்கினர்.


அய்யப்பன், வேங்கடப்பன் இருவரிடம் இருந்து இந்த இடத்தை வாங்கினர். எனவே அவர்களது தந்தை சென்னப்ப நாயக்கர் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.


செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டில் கட்டினர். இதைத் தொடர்ந்து சென்னை நகரம் வளர்ந்தது.


இதனுடன் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன. இந்த இடங்கள் எல்லாம் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை.


செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் 1746 ஆம் ஆண்டில் கைப்பற்றின. மீண்டும் 1749 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் பிடித்தனர்.இதன் பின்னர்தான் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. நாட்டின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.


1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர் மாற்றம் செய்தார்.


சென்னை என்று பெயர் வைப்பதற்கு மூவர் ஆலோசனை வழங்கினர் என்று கூறப்படும். அவர்கள் பிரபல வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, மூத்த பத்திரிக்கையாளர் சசி நாயர் மற்றும் வெளியீட்டாளர் வின்சென்ட் டி சவுஸா. இவர்களுடன் பின்னாட்களில் பத்திரிக்கையாளரும், எடிட்டருமான சுசீலா ரவீந்திரன், பத்திரிக்கையாளர் ரேவதி. ஆர், தொழிலதிபர் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து கொண்டனர் என்று கூறப்படுவதும் உண்டு.


உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை சென்னையில் உள்ள மெரினா கடற்கரையாகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும்.


இந்தக் கடற்கரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு வடகோடியில் கடலில் கூவம் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.


தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.


சென்னை என்றாலே நினைவுக்கு வருது மெரினா கடற்கரை, கோயில்கள், கர்நாடகா இசை கச்சேரி, மண மணக்கும் பில்டர் காபி. இத்துடன் ஜல்லிக்கட்டு போராட்டம், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் போட்டி, 2015ல் ஏற்பட்ட வெள்ளம் சென்னையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி சென்னையை தனது இரண்டாவது தாய் இல்லம் என்று பெருமை பொங்க கூறுவது உண்டு.


சென்னையில்தான் சமீபத்தின் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்தார். இவருக்கு தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் சென்னையில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்று கூறுவதும் உண்டு.


இவ்வளவு ஏன் இன்று அமெரிக்க துணை அதிபருக்கான போட்டி களத்தில் நிற்கும் கமலா ஹாரிஸ் சென்னையில் தனது சிறு வயதைக் கழித்தவர்.


இவர் தனது பேட்டியில் பெசன்ட் நகர் பீச் குறித்தும், அந்த பீச்சில் தனது தாய் வழி தாத்தாவுடன் நடைபயிற்சி சென்றதையும் குறிப்பிட்டுள்ளார். சென்னை எங்கே இருக்கிறது, அதன் சிறப்பு என்ன, ''சித்தி'' போன்ற வார்த்தைகளையும் கூகுளில் உலக மக்களை தேட வைத்தார். இப்படி சென்னை நகரின் பெருமை ஒன்றல்ல, இரண்டல்ல... சொல்லிக் கொண்டே போகலாம்.


வாழ வந்தோரை வாழ வைக்கும் சென்னை நகரம் என்றும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டுடே இருக்கும்.


வாழ்த்துவோம் சென்னை நகரை.


மோகனா  செல்வராஜ்