பஞ்சபூதத் தலங்கள் வாயுத்தலம்
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் - வாயு
திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி
மூலவர், சுயம்பு தீண்டாத்திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பின்னால் கட்டப்பட்டது.
சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தைச் சார்த்தும்போதும் எடுக்கும்போது கூட சுவாமி மீது கரம் படக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கவசத்தை எடுத்துப் பார்த்தால் இத்திருமேனியின் அற்புதமான அமைப்பைத் தரிசிக்கலாம்.
சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும்,
மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி - சதுர ஆவுடையார்.
காளத்தியானைக் கண்ணுளானாகக் கண்டு தொழ - எத்தனை நேரம் தொழுதாலும் தெவிட்டாத தரிசனம். இச் சந்நிதியில் கிடைக்கும் சாந்திக்கு ஈடேது. விட்டுப் பிரிய மனமில்லை. நமக்கே இந்நிலை என்றால் கண்ணப்பர்க்கு வாய்த்தது எப்படியிருக்கும்?
சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. கீழே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பில் உள்ள இம் மூர்த்தம் மான மழு ஏந்தி அபயஹஸ்த, சிம்மகர்ண முத்திரைகளுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகுற விளங்குகிறது.
மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் அசைந்து கொண்டு, வாயுத்தலம் இஃது என்பதை நிதர்சனமாகக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு தொழுவோம்.
சந்நிதியில் சிலைக்கை வேடர் பெருமானாகிய கண்ணப்பரின் மூலத் திருமேனி உள்ளது. 'கும்பிட்ட பயன் காண்பார்போலச் சிலைக்கை வேடர் பெருமானைக் கை தொழுதார்' ஞானசம்பந்தர் என்பதை எண்ணி நாமும்
கண்ணப்பர் கழல் பணிகின்றோம்.
மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.
கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம், பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு அத்தீர்த்தத்தையே தருகின்றனர். நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்துத் தருகின்றனர்.
மூலவருக்குக் கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக் கூடாது பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. சுவாமிக்கு மேலே தாராபாத்திரம் உள்ளது.
கருவறை அகழியமைப்புடையது. கோஷ்ட மூர்த்திகளாக கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சர்பப் (பாம்பு) தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம் இராகுகால சாந்திகள் செய்தல் முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. இக் கோயிலில் உச்சிக்காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.
நாடொறும் நான்கு கால பூஜைகள், பரத்வாஜ, மகரிஷி இங்குத்
தவஞ்செய்து பேறு பெற்றாராதலின் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜைகளைச் செய்து வருகின்றார்கள்.
இத்தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார்கள்.
மன நிறைவான தரிசனத்துடன் வெளியே வந்து பிராகார வலமாக வரும்போது வலப்பால் சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. இடப்பால் படிகளேறிச் சென்று வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியரைத் தரிசிக்கலாம்.
எதிரில் உள்ள தூணில் ஐயப்ப சுவாமி ஒரு காலில் யோக பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். காசி இராமேஸ்வரலிங்க மூர்த்தங்கள் உள்ளன.
பக்கத்தில் வில் ஏந்திய கண்ணப்பர் திருவுருவம் கம்பீரமாகத் தரிசனம் தருகிறது. வரிசையாக வல்லபை கணபதி, லட்சுமி கணபதி சக்தி கணபதிகள் உள்ளனர்.
கிருஷ்ணதேவராயரும் அவருடைய மனைவியாரும் பிரதிஷ்டை செய்ததாக லிங்கங்கள் உள்ளன. இவ்வாறே அடுத்தடுத்து, பெரியதும் சிறியதுமாகவும், சீதை லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள் முதலியோர்கள் பிரதிஷ்டை செய்ததாகவும் பல சிவலிங்கங்கள் உள்ளன.
நாளை வாயு (பகுதி 4) ஆலயம் தொடரும்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம் - சிவமே அன்பு
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்