ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்


தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.


இதன்படி ரேஷன் பொருள் வாங்க கடைக்கு சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வார்.


அதன்பின்னர் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதுவே இப்போது உள்ள நடைமுறை.


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் உங்கள் வீட்டுக்கு கிடைக்கும்.


முதல்கட்டமாக இந்த நடைமுறை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


27.07.2020  முதல்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் மிஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது.


ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வராதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று என்கிறார்கள்.


எனினும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் வேலைக்கு செல்வோர் அரிசி வாங்க ஒரு நாள் விடுமுறைதான் எடுக்கும் நிலை ஏற்படும் என்ற புகாரும் உள்ளது.


வயதானவர்கள், நேரில் சென்று வாங்க முடியாதவர்கள், அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து வாங்குவார்கள். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற புகாரும் உள்ளது.