பஞ்சமி வழிபாடு வராகி தேவி கருட பஞ்சமி வழிபட வேண்டிய நாள்


பஞ்சமி வழிபாடு; வளம் தரும் வாராஹி மந்திரம் 


இன்று பஞ்சமி திதி. வராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது.


சக்தி வாய்ந்த மாதம் இது. சக்தி என்று அழைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு உரிய மாதம் இது. அற்புதமான ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள்.


ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி என்பது வாரஹி தேவிக்கான நாள். அவளை ஆராதிக்கக் கூடிய நாள்.


அப்படியிருக்க, ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது இன்னும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.


ராஜராஜ சோழன் எந்தச் செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார் என்பார்கள். இதனால் இந்த அம்மனை சோழ தேசத்தின் வெற்றித்தெய்வம் என்றும் காவல் தெய்வம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். தஞ்சை பெரியகோயில் எழுப்பப்படுவதற்கு முன்பே, வாராஹி வழிபாடு இருந்துள்ளது என்றும் அவளுக்கு சிலை எழுப்பி வணங்கப்பட்டு வந்ததாகவும் சொல்கிறார்கள்.


மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப் பெரிய கோயிலில் உண்டு.


எங்கும் எந்த வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. ஆனால் இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியை வழிபடுகின்றனர்.


சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்கை எனும் சக்தியின் தளபதியான வாராஹிக்கு பெரிய கோயிலில் பின்னர் சந்நிதி வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.


கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். 


திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடும் என்பது ஐதீகம்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடும். தவிர வழக்கு விவகாரங்கள், வியாபாரச் சிக்கல்கள் குறித்து வீட்டில் இருந்தபடியே வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது உறுதி.


ஸ்ரீ வராஹி காயத்ரி மந்திரம்


ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்


என்கிற வாராஹி காயத்ரியை சொல்லுங்கள்.


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.’


என்றும் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில்   கொண்டாடிய அன்னையின் வாராஹி வழிபாடு நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.


வளர்பிறை பஞ்சமி என்றில்லாமல் எந்தநாளிலும் சொல்லலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முக்கியமாகச் சொல்லலாம்.


சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.


 


சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

 

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

 

வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய்  எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!

 

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

 

மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வாராஹியை தரிசனம் செய்து ,  விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, வாழ்வை மங்களகரமாக்கவும், நம் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர  கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி 

வளமான வாழ்வைத் தரும் வாராஹியை மனதார வழிபடுங்கள்.


     பஞ்சமி வழிபாடு; மாற்றமும் ஏற்றமும் தருவாள் வாராஹி 


கருட பஞ்சமி : பாவம் தீர்க்கும், பயம் போக்கும் பட்சி ராஜா வழிபாடு
     தோஷம் போக்கும் கருடாழ்வார்.




சதுர்த்திக்கு அடுத்த நாள் பஞ்சமி. ஆடி மாதத்தில் நாக சதுர்த்திக்கு அடுத்தநாள் கருட பஞ்சமி. கருடனை வணங்கும் நாள். அதாவது பூமிக்குக் கீழே உள்ள நாகங்களை வழிபடும் நாள் நாக சதுர்த்தி. வானில் பறக்கக் கூடிய கருடனை வணங்கும் நாள், கருட பஞ்சமி. மிக உன்னதமான நாள் இது.


கருடன் என்பது சாதாரணப் பறவை அல்ல. மகாவிஷ்ணுவின் வாகனம். திருமாலின் வாயிற்காப்பாளன். கருடனின் பார்வை கிடைத்துவிட்டாலே, நம்மில் பாதி பாவங்கள் தொலைந்துவிடும். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று கருடனுக்கு அத்தனை சக்திகளை அருளியிருக்கிறார் மகாவிஷ்ணு.


அதனால்தான், கருடனை ஆழ்வார் எனும் திருநாமம் சேர்த்து, கருடாழ்வார் என்று போற்றுகிறது புராணம்.


அதனால்தான், எல்லா வைணவக் கோயில்களிலும் பெருமாள் சந்நிதிக்கு எதிரே, தன் தலைவன், லோகநாயகன் பெருமாளை வணங்கி, கைக்கூப்பியபடியே நிற்கும் கருடாழ்வார் சந்நிதி அமைத்திருக்கிறது ஆகமம்.


விழாக்காலங்களில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சி.




ஆடி மாதத்தின் வளர்பிற பஞ்சமி, கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது. இந்தநாள், கருடாழ்வாருக்கு உகந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது



கருட பஞ்சமியில் கருடாழ்வாரை வணங்குவோம். தோஷங்கள் அனைத்தும் நீக்கியருள்வார். சந்தோஷத்தைப் பெருக்கித் தருவார்.


சகல ஐஸ்வரியங்களையும் வழங்கி அருளும்  கருட பஞ்சமி  நாளில், கருடாழ்வாரை பிரார்த்திப்போம்.  


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்