கண்ணப்ப நாயனார் நிறைவு

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.



குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது


இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார்.


நேற்றைய தொடர்ச்சி


சிவகோசாரியார் ,  சிவபெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது.அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார்


திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்து கொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய  சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன.


தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார்.


அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது.


செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார்.


எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார்.


மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது.


ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார்.


மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார்.


உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார்.


இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூ மழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ.
"இதுவோ கடவுட்பற்று"


ஆதி சங்கரர்


சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார்.


அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார்.


அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு:


    வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;
    வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;
    சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;
    பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு          எவர்?


இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.


சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்துவிட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கைதான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படிதான்.


 சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது.


ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும்


'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில்தான் இருக்கிறது.


அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச்சொல்லமுடியாது.


திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடுவ குலத்தில் பிறந்தவர். வேட்டை ஆடுவதால் சிறந்தவர், நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.


அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார்.


இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.


கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார்



சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார்.


அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார்.


இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார்.


பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.



கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.


மாணிக்கவாசகர்


    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை "வா" என்ற வான் கருணை
    சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி


கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.


"கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை


பூசை நாள்: தை மிருகசீருஷம்


முக்தித் தலம்: திருக்காளத்தி (Andra Pradesh)


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்