ஆடி கிருத்திகை சிறப்பு


நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் - ஆடி கிருத்திகை சிறப்பு


“ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த  ஒரு மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன.


அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. அற்புதமான அந்த ஆடி கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.


சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான்.


அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது.


வருடத்தில் “தை கிருத்திகை” “ஆடி கிருத்திகை” என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும். 


பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தணி” கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.


ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி:


இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும்.


முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்


ஆடி கிருத்திகை விரதம் பலன்கள்:


இந்த ஆடி கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


ஓம்  சரவணபவ


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்