பத்மநாபசாமி கோவில் - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு



திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.


இந்த கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, அவற்றினுள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 2011-ம் ஆண்டில் கோவிலுக்கு அருகே வசிக்கும் வக்கீல் சுந்தரராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இரண்டு முன்னாள் நீதிபதிகள் உள்பட 7 பேர் அடங்கிய குழுவை நியமித்து, பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறை களை திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.


தனது ஆய்வு தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்தார்.


அதில் அவர் கூறி இருப்பதாவது:-


பத்மநாபசாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ‘பி’ என்ற பாதாள அறையை திறந்து, அதனுள் இருக்கிற நகைகளின் மதிப்பை கண்டறிய உத்தரவிட வேண்டும். ‘ஜி’, ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் திறந்து, அவற்றுக்குள் இருக்கிற ஆபரணங்களையும், அவற்றின் மதிப்பையும் கணக்கிட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


இந்த கோவிலின் அன்றாட காரியங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் குடும்பத்தின் தலையீடு இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-


பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க மாநில அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.


பத்மநாபசாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வந்த மன்னர் குடும்பத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.


கோவிலை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டு வரையறுத்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும்.


அதுவரை தற்போதைய நிலையான மாவட்ட நீதிபதி தலைமையிலான நிர்வாக குழுவே கோவிலின் நிர்வாகத்தை தொடரலாம்.


கோவில் நிர்வாகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்த கூடுதல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.


கடந்த 25 ஆண்டுகளாக கோவிலுக்கு கிடைத்த வருமானம் மற்றும் செலவு பற்றி கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டும்.


மன்னர் குடும்பம் அல்லது அவர்களின் வாரிசுகள் கோவிலின் நிர்வாகி அல்லது அறங்காவலர் என்ற முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளக்கூடாது. நிர்வாக குழுவால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிக்கு அந்த குழுவால் நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை வழங்கலாம்.


இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.