அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி-WHO சம்மதிக்குமா?

அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி.. தேதியை அறிவித்த ரஷ்ய ஆய்வாளர்கள்.. WHO சம்மதிக்குமா?மாஸ்கோ: தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம், 12 முதல் 14ம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக ரஷ்யா நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகம், சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு உலகம் முழுக்க பேச்சு பொருளாக மாறியது.


ஆம்.. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய விஞ்ஞானிகள் குழு அறிவித்தது.


ஜூன் 18ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. 18 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர்.


இதையடுத்து, 20 தன்னார்வலர்களுக்கு, இரண்டாவது கட்ட பரிசோதனையாக, ஜூன் 23ம் தேதி தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில் முதல்கட்ட டிரையல் நாளையுடன் நிறைவடைகிறது.


செசெனோவ் பல்கலைக்கழக மையத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான எலெனா ஸ்மோல்யார்ச்சுக், ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம் இதுபற்றி கூறுகையில், தன்னார்வலர்கள் மீதான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஆய்வு டேட்டாக்களை வைத்து பார்த்தால், தடுப்பூசி பலன் தந்துள்ளதாகவும் தெரிவித்தார். "ஆராய்ச்சி முடிக்கப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை இது நிரூபித்தது," என்றும் ஸ்மோல்யார்ச்சுக் தெரிவித்துள்ளார்.


ஆகஸ்ட் 12-14 தேதிகளில் இந்த தடுப்பூசி ‘பொதுப் புழக்கத்திற்கு நுழையும்' என்று தான் நம்புவதாக கமலே மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், டாஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் இந்த மருந்து உற்பத்தியைத் தொடங்கக்கூடும் என்றும் மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?


இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகள் படி, ஒரு தடுப்பூசி பெரிய அளவிலான உற்பத்திக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் மூன்று கட்ட ஆய்வுகளை கடக்க வேண்டும். ரஷ்ய தடுப்பூசி ஆய்வை, முதல்கட்டமாகத்தான், ஹு கருதுகிறது.


இதுவரை, மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு எந்த தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை.