கேரளாவை அதிரவைத்த தங்கம் கடத்தல்

கேரளாவை அதிரவைத்த தங்கம் கடத்தல் 


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ 24 கேரட் சுத்தத் தங்கம் திருவனந்தபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. சம்பவம் நடந்து 6 நாள்களுக்குப் பின், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள ஐ.டி அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.


தங்கம் கடத்தல் தொடர்பாக பார்சலைப் பெற வந்த சரீத், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் ஃபசீல் ஃபரீத் என நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


இதில், ஸ்வப்னா சுரேஷ் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. திருவனந்தபுரத்தில் தங்கம் கைப்பற்றப்பட்ட பின்னர், ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். 


பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் சாலைமார்க்கமாக கொச்சி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வரும் வழியில் பல இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வப்னா அழைத்துவரப்பட்ட வாகனம், வடக்கன்சேரி என்ற இடத்தில் பஞ்சரானது. பின்னர், அவர் வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டு கொச்சி கொண்டுவரப்பட்டார்


இந்த விவகாரத்தில் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு நபரை சுங்கத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தப்படுவதற்கு மலப்புரத்தைச் சேர்ந்த இந்த நபரே மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்கிறார்கள்.


தங்கம் கடத்தல் வழக்கில் இவரது கைது முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மிக முக்கிய நபரான அவர் குறித்த தகவல்களை சுங்கத்துறையினர் வெளியிடாமல், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரித்து வருவதாகக் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.