கழறிற்றறிவார் நாயனார் ( பகுதி 2)

கழறிற்றறிவார் நாயனார்  ( பகுதி 2)


சேரமான் பெருமான் நாயனார்


நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு


பகுதி - 2



அத்தோடு திருப்தியடையாமல், மன்னன் அப்புலவனிடம், யானை, குதிரை, பசுக்கள் முதலியவைகளையும், எமது அரசாட்சியையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பணிவன்போடு பகர்ந்தார்.


இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரன், வேந்தரின் உயர் குணத்திற்குத் தலைவணங்கினான். பொங்கி வந்த எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் அகமும் முகமும் மலரத் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டான்.


அரசே தாங்கள் கொடைவள்ளல் மட்டுமல்ல; அடியார்களின் நெஞ்சத்திலே கோயில் கொள்ளும் காவலன், குவலயம் போற்றும் மெய்யன்பர். இவ்வடியேன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம்.


அரசாட்சி முதலியவற்றைத் தாங்களே கைக்கொண்டு ஆளுதல் வேண்டும் என்பதுதான் ஆலவாய் அண்ணலின் ஆணை என்று விடை பகர்ந்தார் பாணபத்திரன்.


அரசர் புலவரை ஒரு யானை மீது அமரச் செய்து தாம் அளித்த விலையில்லாச் செல்வங்கள் அனைத்தையும் கரிமா முதலியவற்றின் மீது ஏற்றி வழி அனுப்பி வைத்தார்.


சேரப் பேரரசு பாணபத்திரன் எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார்.


பாணபத்திரனும் மதுரை சென்று மட்டற்ற மகிழ்ச்சியோடு மனையறத்தை வளர்த்ததோடு சங்கத் தமிழையும் வளர்த்தார்.


இவ்வாறு வியக்கத்தக்க முறையில் அரசாண்டு வந்த சேர மன்னர் வழக்கம்போல் ஆலயப் பணியையும் தவறாமல் நடத்தி வந்தார். ஒருநாள் நாயனார் சிவ வழிபாட்டை முடித்ததும் வழக்கமாகக் கேட்கும் பரமனின் பாதமணிச் சிலம்பொலி கேட்கவில்லை. மன்னர் வருந்தினார்.


கண்களில் நீர் வழிய, கரமிரண்டையும் மேலே உயர்த்தி, ஆலமுண்ட அண்ணலே! அடியேன் செய்த பிழை யாது? என்னை ஆளும் ஐயனே! இனியும் இவ்வெளியோன் உயிர் தரிவது யார் பொருட்டு? எதன் பொருட்டு? கூர்வாளும், செங்கோலும் ஏந்தி ஆள்வதை விட கூர்வாளுக்கு இரையாகி மாள்வதே நல்லவழி எம்பெரும் தலைவா அடியேன், அறிந்தோ அறியாமலோ பிழை ஏதும் புரிந்திருந்தால் பிழையைப் பொருத்தருளும் என்று பரமனின் பாதகமலங்களைப் பற்றி பணிந்தார்.


மன்னன் உடைவாளை உருவி மார்பில் நாட்ட முயன்றபோது எம்பெருமான் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு கலீர், கலீர் என்று சிலம்பொலியை மிகுதியாகக் கேட்கும்படிச் செய்தார். நாயனார் எய்திய உவப்பிற்குத்தான் அளவேது! நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார். அருட்கடலே! அன்புப் புனலே  அமிழ்தம் அளித்த அரசே வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ? என்று கேட்டார்.


அப்பொழுது விண் வழியே அசரீரி வாக்கு எழுந்தது. சேரனே எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம் பலத்தை வழிபட்டு, வண்ணத் தமிழால் பதிகம் பாடினான்.


தேனென இனிக்கும் அவனது அருட்பாக்களில் அன்பு வயப்பட்டு என்னை மறந்த நிலையில் ஈடுபட்டிருந்தமையால் உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம்.


இவ்வருள் வாக்கு கேட்டு, சேரமான் பெருமாள் நாயனார், இத்தகைய பெருமைமிக்க அருந் தொண்டனைக் காணப் பெறாத நான் பிறவி எடுத்து என்ன பயன்?


போற்றதற்குரிய அப்பெருந்தகையை இக்கணமே நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன். தில்லையம்பதி சென்று ஆடுகின்ற அரனாரைப் போற்றி எம்பெருமானை மதிமயங்க வைத்த ஒப்பற்ற திருத்தொண்டராம் வன்றொன்டனையும் கண்டு வணங்கி வழிபட்டே வருவேன் என்று எண்ணினார். நாளாக, நாளாக அரசர்க்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும் வேம்பாக கசந்தது.


திருத்தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவராய் வாழ்வதனையே பேரின்பமாகக் கொண்டார். அதற்கு மேல் மன்னன் அரசாள விரும்பவில்லை. ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தான் மன்னன். ஓர் நன்னாளில் வேல் ஏந்திய மல்லர்களும், வில்லேந்திய வீரர்களும், வாள் ஏந்திய காவலர்களும், அறம் கூறும் அமைச்சர்களும், நால்வகைப் படையினரும் புடை சூழ அத்தாணி மண்டபத்தில் அரசோச்சிய அருங்காவலன் அரச போகத்தைத் துறந்தான். திருவஞ்சைக் களத்து அண்ணல் அடிபோற்றி 


தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்த சேரப் பெருந்தகையை, தில்லைவாழ்  அந்தணர்களும், அன்பர்களும், அடியார்களும் வேதம் ஒலிக்க, மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட எதிர்கொண்டு அழைத்து வந்தனர்.


சேரமான் பெருமாள் நாயனார் ஏழு நிலை கோபுரத்தை இசைத் தமிழால் ஏற்றி துதித்து, நிலமுற பணிந்தெழுந்து உள்ளே சென்றார். சிற்றம்பலத்துக்கு முன் சென்று, சித்தம் ஒடுங்க, பக்தி, காதலாகிக் கசிந்துருக, தமிழ்ச் சுவை அருளோடு கூடி ஆறாகப் பெருகிவர, பொன் வண்ணத் தந்தாதி என்னும் பிரபந்தத்தினைப் பாடியருளினார் சேரமான்.


தொடரும்.


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்