வேலூர் சிப்பாய் புரட்சி எழுச்சி 10/07/1806


வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்


1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார்.


சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர்.


வேலூர் புரட்சி - முதல் சுதந்திரப் போர்!வட இந்தியாவில் சிப்பாய் புரட்சி வெடித்தபிறகுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமானது என்பது வரலாறு கூறும் தகவல்.


ஆனால் அதற்கு முன்பே கிட்டத்தட்ட அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்!


வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை!


வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் வாரிசுகளும், உறவினர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.


இந்நிலையில், வெள்ளையரைப் போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள். அதனால் பக்கீர்களைப் போல வேடமிட்டு கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தனர்.


விரைவில் பிரெஞ்சுப் படைகள் இந்தியா வரும், வெள்ளையர் ஆதிக்கம் மறைந்துவிடும் என்று நம்ம்பிக்கையூட்டினர்.


1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர்.
10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர்.


ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது.


அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர்


வேலூர் புரட்சி வெடித்தபோது சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்கும் மாநில முதன்மை படை தளபதி சர்ஜான் ரடாக்கும் பதவியிலிருந்து பிரிட்டிஷ் அரசால் நீக்கப்பட்டனர்.


வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றேறக்குறைய அதே காரணங்களுக்காக வட இந்தியாவில் சிப்பாய் கலகம் மூண்டது.


இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும்.


இச் சிப்பாய்ப் புரட்சி  ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.


வந்தே மாதரம்தொகுப்பு மோகனா செல்வராஜ்


 


.