கழறிற்றறிவார் நாயனார் பகுதி 1
சேரமான் பெருமான் நாயனார்
நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு
மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இந்நகருக்கு மாகோதை என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும்.
எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அம்மையாரின் பெயர் உமையம்மை. இத்தலத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு சிவகங்கை என்று பெயர்.
அந்நகர் செய்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். மாகோதையார் மன்னர்க் குலத்திற்குரிய படைக்கல பயிற்சியைக் கற்காமல் கண்ணுதலார் கமல மலர்ப்பாதங்களைப் பற்றுவதற்கான சிவ மார்க்கங்களை உணர்ந்து சமய நூல்களைக் கற்று வந்தார்.
அரவணிந்த அண்ணலின் சிந்தனையில் அரச போகத்தையும், அரண்மனை வாழ்வையும் வெறுத்தார். சிவனார் எழுந்தருளியிருக்கும் திருவஞ்சைக் களம் என்னும் திருத்தலத்தை அடைந்து கோயிலருகே மாளிகையொன்று அமைத்துக்கொண்டு சிவத்தொண்டு புரிந்து வரலானார்.
சித்தத்தை சிவன்பால் வைத்துச் சிந்தை குளிர்ந்தார். ஒவ்வொரு நாளும் வைகறைத் துயில் எழுவார். தூய நீராடுவார்.
திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை முறையோடு வேதநெறிப்படி அணிந்து கொள்வார். மலர்வனம் செல்வார்.
வழிபாட்டிற்கு உகந்த நறுமலர்ச் செடி, கொடிகள் வளர பாத்தி வெட்டிகளையெடுப்பார். நீர் பாய்ச்சித் திருப்பணிகள் பல செய்வார். மாலையில் மலரக் கூடிய மலர் வகைகளையும் காலையில் மலர்ந்த மலர்களையும், வகை வகையாகப் பறித்துக் கொள்வார். வித விதமான மாலைகள் தொடுத்து கோயிலுக்குள் செல்வார். கோயிலைக் கூட்டி மெழுகி கோமய நீரால் சுத்தம் செய்வார்.
இறைவனின் பாத கமலங்களில் தாம் தொடுத்து முடித்துப் பூமாலைகøளைச் சாத்தி தமிழ்த் தேனால் எடுத்து முடித்த திருப்பதிகப் பாமாலைகளால் போற்றுவார். தம்மையே மறந்து வழிபடுவார்.
இவ்வாறு இப்பெருமாக் கோதையார் திருவஞ்சைக் களத்துப் பெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்து வரும் நாளில் கொடுங்கோளுரிலிருந்து அரகோச்சி வந்த செங்கோற்பொறையன் என்னும் மன்னன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கக் கருதினான்.
மன்னன் பதவி என்ற பட்டத்தை உதறினான். துறவி என்ற பட்டத்தைத் தாங்கினான். நாடு களைந்தான். காடு புகுந்தான். அருந்தவம் ஆற்றத் தொடங்கினான்.
அதன் பிறகு அமைச்சர்கள், நன்கு ஆராய்ந்து பெருமாக்கோதையாரையே அரசனாக்குவது என்ற முடிவிற்கு வந்தனர். ஒருநாள் அமைச்சர்கள் அரச மரியாதையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருவஞ்சைக் களத்தை அடைந்தனர்.
பெருமாக் கோதையாரை வணங்கி அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் மொழிந்ததைக் கேட்டு, திருமாக் கோதையார் சற்று சித்தம் கலங்கினார்.
அரசு கட்டிலில் அமர்வது அரனார் திருவடித் தொண்டிற்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். அரண்மனை வாழ்வு அரவணிந்த அண்ணலை மறந்திருக்கச் செய்யும். மாய சக்தி படைத்ததாகும் என்றெல்லாம் பலவாறாக தமக்குள் எண்ணினார்.
அமைச்சர்களைப் பார்த்து, அமைச்சர் பெருமக்களே! யான் அரசாட்சி ஏற்பதென்பது எமது சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். அறிந்தும் தவறு செய்யலாமா.
அறம் வளர்க்கும் செங்கோலை நான் தொட வேண்டுமென்றால் தோடுடைய செவியன் திருவருள் எனக்குக் கிட்ட வேண்டும். இறைவன் திருவருளினால் மட்டுமே என்னால் மகுடத்தைச் சூட்டிக்கொள்ள முடியமே அன்றி, வேறு வழியே கிடையாது என்றார் அமைச்சர்களும் சம்மதித்தனர்.
பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை பகர்ந்தார். அப்பொழுது ஆலயத்திலே ஒரு பேரொளி பிறந்தது. எம்பெருமானின் அருள்வாக்கு எழுந்தது.
சேரர் குலக்கொழுந்தே வருந்தற்க நீ அரச பதவியை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாயாக உலகிலுள்ள உயிர்களுக்கு என்றும்போல் தொண்டு செய்து வருவாயாக. விலங்குகள் பறவைகள் போன்ற மற்றெல்லா ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக் கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம்.
அரசின் வல்லமையையும் பெரும் கொடையையும், ஆயுதம், வாகனம் முதலிய அரசர்க்குரியனவற்றையும் உனக்கு அளிக்கிறோம். எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய அத்தனைப் பேறுகளையும் பெற்றார் பெருமாக்கோதையார்.
திருமாக்கோதையார் அமைச்சர்களிடம், அரசை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தார். அனைவரும் பெருமகிழ்ச்சி பூண்டனர்.
தொடரும்.
திருச்சிற்றம்பலம்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்