சாத்தான்குளம் சம்பவம் - இயக்குநர் ஹரி & சூர்யா வேதனை

 



காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.


கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த பிறகு அப்பாவும், மகனும் இறந்துவிட்டனர்.


சிறையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை நிர்வாணப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொலை செய்த போலீசாருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.


ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு சிறையில் நடந்தது என்னவென்று பாடகி சுசித்ரா விரிவாக ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு பாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் போலீஸ்காரர்களை பெருமைப்படுத்தும் விதமாக சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி, சாமி 2 என்று 5 படங்களை எடுத்த இயக்குநர் ஹரி கோபம் அடைந்துள்ளார். சாத்தான்குளம் சம்பவம் பற்றி ஹரி கூறியிருப்பதாவது,


சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக ஹரி இயக்கத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி துரைசிங்கமாக நடித்த சூர்யா சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,


'அதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வர வேண்டும்‌!


'மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குக்கூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன.


சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ 'லாக்கப்‌ அத்துமீறல்‌' காவல்‌ துறையின்‌ மாண்பைக் குறைக்கும்‌ செயல்‌. 'இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌' என்று கடந்து செல்ல முடியாது.


இந்தக் கொடூர மரணத்தில்‌, தங்களுடைய கடமையை செய்யத்‌ தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்‌. உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை அளிக்கிறது.


இரண்டு அப்பாவிகளின்‌ மரணத்திற்குப்‌ பிறகும்‌, உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீஸாரை 'ஆயுதப்படைக்கு' மாற்றம்‌ செய்வது மட்டுமே. ஆயுதப்படையில்‌ பணியாற்றுவது என்பது, 'தண்டனை கால பணியாக' பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது.


'இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா?' என்று எழுந்த விமர்சனத்திற்குப்‌ பிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார்‌ 'பணியிடை நீக்கம்‌' செய்யப்பட்டனர்‌.


காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ தன்‌ கடமையைச் செய்கிற பலரை தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌. ஒட்டுமொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும்‌ ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ உழைக்கின்றனர்‌. 'கரோனா யுத்தத்தில்‌' களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்குத் தலைவணங்குகிறேன்‌.


அதேநேரம்‌, அதிகாரத்தைப் பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எனது கடும்‌ கண்டனங்கள்‌. அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது.


அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையைச் செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌.


ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்தக் குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.