அப்பூதி அடிகள் நாயனார்
திங்களூர் வளமிகுந்த சோழ நாட்டிலுள்ள ஒரு திருத்தலம்.எழில்மிகு சோலைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட இத்தலத்திலே வாழ்ந்து வந்த சிவத்தொண்டர் பலருள் அப்பூதி அடிகளார் என்பவரும் ஒருவர். இவர் அந்தணர் மரபிலே அவதரித்தவர்.
இறைவனின் திருவடிக் கமலங்களை இடையறாது நினைத்து உருகும் இவ்வன்பர் மேன்மையும் புகழும் மிக்கவர். இவர் மனைவியோடும், மகனோடும் இல்லறத்தில் இன்பமுற வாழ்ந்து வந்தார். இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபடும் அரும்பெரும் தவத்தினர்.
அவர் தமது சிந்தையில் எந்நேரமும் இறைவனின் திருநாமத்தையே கொண்டிருந்தார். களவு, பொய், காமம், கோபம் முதலிய குற்றங்களை எள்ளளவும் சிந்தையிலே கொள்ளளவில்லை.
கற்புக்கடம் பூண்ட இல்லாளுடன் இல்லறத்தை அறத்தோடு திறம்பட நடத்தி வந்தார். இத்தகைய அருந்தவத்தினரான அப்பூதி அடிகள் அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும், எம்பெருமானின் திருவருட் கருணையையும் கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார்.
தாம் பெற்ற செல்வங்களுக்கு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல ; அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றிற்கெல்லாம் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
அப்பர் சுவாமிகளை நேரில் பாராமலேயே அவர் தம் திருவடிகளை நினைத்து போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார். அப்பூதி அடிகளுக்கு ஒருமுறை அப்பரடிகளைச் சந்திக்கும் தவப்பேறு கிட்டியது.
அப்பரடிகள் இறைவனைத் தரிசிக்க திங்களூர் வந்தார். அங்கு பெருந் தண்ணீர்ப் பந்தல் ஒன்றைப் பார்த்தார். கோடைக்காலத்தின் கெõடுமை தெரியாதிருக்கும் வண்ணம் பந்தலைச் சற்றுப் பெரிதாகப் போட்டுக் கீழே மணலைப் பரப்பி குளிர்ந்த நீரை நிறையக் கொட்டி øவத்திருந்தனர்.
இதனால் அங்கு தண்ணீர் அருந்தி விட்டுத் தங்குவோர்க்குச் சற்று வெம்மையைத் தணித்துக் கொள்ளவும் மார்க்கமிருந்தது. அருளுடையார் திருவுள்ளத்தைப்போல் குளிர்ந்த தன்மையுடையதாய் அத்தண்ணீர்ப் பந்தல் அமைந்து விட்டதால் அந்நிழலில் எப்பொழுதும் ஜனங்கள் திரள்திரளாக வந்து தங்கிச் சென்ற வண்ணமாகவே இருப்பர்.
இப்பந்தலைப் பார்த்த அப்பர் அடிகள் இவற்றையெல்லாம் எண்ணி உளம் மகிழ்ந்தார். அத்தோடு இவர் பந்தலின் எல்லா பாகங்களிலும் அழகுபட திருநாவுக்கரசு என்று எழுதியிருப்பதையும் பார்த்தார். அதைப் பார்த்ததும் அடியார்க்கு வியப்புமேலிட்டது.
அங்கு கூடியிருந்தவர்களைந் பார்த்து, இத்தண்ணீர்ப் பந்தலுக்கு இப்பெயரிட்டவர் யார் என்று கேட்டார். திருநாவுக்கரசர் இவ்வாறு வினவியதும் அங்கிருந்தவருள் ஒருவர், இப்பந்தலுக்கு இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர்தான். அவர்தான் இதை அமைத்து மக்களுக்கும் அடியார்களுக்கும் நற்பணியாற்றுகிறார்.
நாளை தொடரும்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்