தினம் ஒரு திருத்தலம்-அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்

 

தினம் ஒரு திருத்தலம்... எல்லாமே இரண்டு... பாணலிங்கம் வடிவம்...!!

அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்...!!




அமைவிடம் :


ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.


மாவட்டம் :

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்(படம்பக்கநாதர்) திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை.


எப்படி செல்வது?

சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.

கோயில் சிறப்பு :


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.


முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.


திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின

தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. 


பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். 


கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் சக்தி பீடங்களில் இது இஷீ பீடமாகும். 

திருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம். சுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம். பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.

பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது. வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.


பிரார்த்தனை :

திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.


நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


பக்தியுடன்


திருச்சிற்றம்பலம் 

மோகனா செல்வராஜ்