செய்திகள்

 


கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டது . பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி,  ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமீதா,இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி  விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.நடிகர்கள் சிவகார்த்திகேயன்,யோகி பாபு உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை  வழங்கினார்.

***************************

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை வரலாற்று பிழை செய்திருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றசாட்டியது குறித்த கேள்விக்கு, பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழிசை புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் என கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

****************************

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டிடிவி தினகரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அமமுகவினர், எந்த வகையிலாவது அதிமுகவினர் வருவார்களா? என வாசலை திறந்து வைத்துக் கொண்டு முயற்சி செய்கிறார்கள். 

ஆனால், ஒரு தொண்டன் கூட அந்த கட்சியில் சேர மாட்டான். அந்த பக்கமே திரும்ப மாட்டான். எனவே அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

**********************

கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. 

அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர்  முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது போன்று புகைப்படம்  இடம்பெற்றுள்ளது.

இந்த செயலை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் பொதுமறை திருக்குறள். 

உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது.  ஏற்றுக்கொள்ள முடியாது. 

திருந்துங்கள், இல்லையேல் திருத்துவோம்.’ கவிஞர் வைரமுத்து என பதிவிட்டுள்ளார்.

********************

அதிமுக அரசு, வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது.

தமிழ்நாடு முழுவதும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சி.ஏ.ஏ. சட்டம் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடிய அதிமுக அரசு, வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது என தெரிவித்துள்ளார்.

***********************