இதுவரை நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கும் – WHO

 


இதுவரை உலகில் குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் வுகாண் நகரில்  தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமல்லாது, உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. 

இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கி பத்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த வைரஸின் வீரியம் குறைந்த பாடில்லை.

இந்த பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.43 கோடியை கடந்துள்ளது.

இந்நிலையில், உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கூறியதாவது, 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகானின் தொற்று பரவத் துவங்கி இரண்டு மாதங்களிலேயே, முதலாவது மரபணு மாற்றம் ஏற்பட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறி, பெரும்பாலான தொற்றுகளுக்கு காரணமாக அமைந்தது.

மேலும், மூன்றாவதாக மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்கும் இடையே தோன்றி இருக்க வாய்ப்புள்ளது என்றும், இறுதியாக கடந்த மாதம் பிரிட்டனில் மரபணுமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு முந்தைய வடிவத்திற்கு, மரபு சார் தொடர்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.