ஒரு மருத்துவரின் ஆதங்கம்.

 


"டியர் விஜய் சார், சிம்பு சார்... நாங்கள் சோர்வடைந்து இருக்கிறோம்" - ஒரு மருத்துவரின் ஆதங்கம்...

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. 

இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவிவருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.   இந்நிலையில், திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. 

இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றை பிறப்பித்தார். 

இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.   

அதேநேரம், சமூக ஆர்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 10 மாதங்களாக இரவு, பகல், பசி, தூக்கம் என எதையும் பாராமல் மக்களின் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்பதிவு பின்வருமாறு...  

 "அன்புள்ள நடிகர் விஜய், சிலம்பரசன் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசிற்கு,    நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சோர்வடைந்துள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக உள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். 

மனித இனம் பார்த்திடாத தொற்றுநோய்க்கு மத்தியில், இதனால் ஏற்பட்ட சேதம் முடிந்தவரை குறைவாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் களத்தில் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம்.    வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு இதைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று எனக்குத் தெரியும் என்பதால், நான் எங்கள் வேலையின் புகழ்பாட விரும்பவில்லை. எங்களுக்கு முன்னால் கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளைச் செய்யவில்லை. நாங்கள் ஹீரோக்கள் அல்ல. 

ஆனால், நாங்கள் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் தகுதியானவர்களே. யாரோ ஒருவரின் சுயநலம் மற்றும் பேராசைக்கு நாங்கள் இரையாக விரும்பவில்லை.   தொற்றுநோய் இன்னும் முடிந்துவிடவில்லை, இன்றுவரை மக்கள் இந்த நோயால் இறந்து கொண்டிருக்கிறார்கள். நூறு சதவீத தியேட்டர் ஆக்கிரமிப்பு என்பது தற்கொலை முயற்சி போன்றது. மாறாக படுகொலை எனலாம். 

கொள்கை வகுப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் என்று அழைக்கப்படுபவர்களில் யாரும் இந்த கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து படம் பார்க்கப் போவதில்லை. 

பணத்திற்காக உயிர்களை வர்த்தகம் செய்யும் ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை இது.    

மெதுவாக முயற்சி செய்து, நம் வாழ்வில் கவனம் செலுத்தி, இந்த தொற்றுநோயை நாம் அமைதியாகக் கடந்து செல்லவும், அணைந்துகொண்டிருக்கும் இந்த தீயை மீண்டும் பெரிதாகத் தூண்டிவிடாமல் இருக்கவும் உங்களால் தயவுசெய்து உறுதிசெய்ய முடியுமா? 

இந்தப் பதிவை விஞ்ஞானப்பூர்வமாகவும், நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை விளக்கும் விதமாகவும் அமைக்க விரும்பினேன். ஆனால் என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.       

புதிய வகை கரோனா ஏற்படுத்தியுள்ள அச்சத்தால் ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பெரும்பாலான விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள அரசின் இந்த அறிவிப்புக்கு, நோய்ப் பரவல் குறித்த அறிவியல் பூர்வ தெளிவுடையவர்களின் ஆலோசனைகள் எந்த அளவு பெறப்பட்டன? 

அவ்வாறு பெறப்பட்டிருக்குமாயின் இதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் எதனால்? மூடிய அறையில் மேற்கொள்ளப்படும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் எந்த அளவு பாதுகாப்பானதாக இருக்கும்? போன்ற பல கேள்விகளைத் தாங்கி நிற்கிறது தமிழக அரசின் இந்த அறிவிப்பு.