மத்திய அரசு – விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

 


வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 தினங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 

இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். 

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் குறித்த கருத்தையும் வரவேற்பதாகவும் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

40- விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தையின் போது பஞ்சாபி மொழியில் பேசிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பர்காஷ், பஞ்சாபின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதாக கூறினார். 

4 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 

தீர்க்கமான முன்மொழிவை வழங்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

இதற்கு ஒப்புக்கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் வரும் 9 ஆம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.