சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம்

 



சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ. 380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கும் விழாவில் நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அர்ப்பணிக்கிறார்.


 


 தமிழ்நாடு முழுவதும் நீர் தேக்கங்களை உருவாக்குதல், சிறிய மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், படுகை அணைகள், புதிய ஏரிகள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை அமைத்தல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நீர்த்தேக்கத்தினால் நீர்த்தேக்கம் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும்.  தற்போது பெய்து வரும் பருவ மழையினால் நீர்த்தேக்கத்தில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து சென்னை மாநகரத்திற்கு மாதம் ஒன்றிற்கு  ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வழங்கும் நான்கு  நீர்தேக்கங்கள் மூலம் 11 டி.எம்.சி. நீர் என்பது இப்பொழுது 11.75 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது. 


67 ஆண்டுகளுக்குப்  பிறகு சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 


முதல்வரின் முத்தான நீர் மேலாண்மைத் திட்டங்களினால் நீர் பற்றாக்குறை மாநகரம்  என்ற நிலை மாறி தற்பொழுது நீர்மிகு சென்னை மாநகரமாக உயர்ந்து வருகிறது.   


தமிழகத்தில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.


முதல்வரின் இத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்களையும் சிறப்பான செயல்பாடுகளையும் பாராட்டி மத்திய ஜல்சக்தித் துறை தமிழ்நாடு சிறந்த மாநிலம் மற்றும் முதல் மாநிலம் என அறிவித்து,  தமிழ்நாட்டிற்கு 2019-ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதை வழங்கி பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.