இளம் பெண்ணுக்கு பிரிட்டன் உயர் தூதராக அதிகாரியான வாய்ப்பு


டெல்லியைச் சேர்ந்த, 18 வயது இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் மட்டும், பிரிட்டன் நாட்டின் உயர் துாதரக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரிட்டன் துாதரகம் சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு  முதல், "ஒரு நாள் உயர் துாதர்" என்ற போட்டியை, ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது.


பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்க, 18 - 23 வயது இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த போட்டியில், சைதன்யா வெங்கடேஸ்வரன், 18, என்ற பெண் வெற்றி பெற்றார்.


இதையடுத்து, இவர், கடந்த 7ம் தேதி, டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகத்தில், துாதரக அதிகாரியாக, அவர் பணியாற்றினார்.


துாதரகத்தின் துறைத் தலைவர்களுக்கு பணிகளை வழங்குதல், மூத்த பெண் காவல் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல், பத்திரிகையாளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பல பணிகளை, சைதன்யா மேற்கொண்டார்.


இதுகுறித்து சைதன்யா கூறியதாவது:டில்லியில் உள்ள பிரிட்டன் கவுன்சில் நுாலகத்திற்கு, இளம் வயதில், நான் பல முறை சென்றுள்ளேன்.


அங்கு தான், கற்றல் மீதான என் ஆர்வத்தை நான் வளர்த்தேன். பிரிட்டன் துாதராக, நான் இருந்தது, எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று  அவர் கூறினார்.