இளம் பெண்களுக்கு ஆன்லைன் துன்புறுத்தல்

 உலகின் 58 சதவீத இளம் பெண்கள் 'ஆன்லைன்' வாயிலாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வரும் 11ல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஆன்லைன் வாயிலாக பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'பிளான் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது.


இதில் இந்தியா அமெரிக்கா,பிரேசில், நைஜீரியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 15 - 22 வயது வரையிலான 14 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.


அந்த கருத்துக் கணிப்பின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுதும் பாலியல் வன்முறை இனவெறி கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இளம் பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர்.


ஐரோப்பாவில் 63; லத்தீன் அமெரிக்காவில் 60; ஆசிய பசிபிக்கில் 58; ஆப்பிரிக்காவில் 54; வட அமெரிக்காவில் 52 சதவீத பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 58 சதவீத இளம் பெண்கள் 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், டிக் டாக்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக துன்புறுத்தல் களுக்கு ஆளானதாக தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.