இரக்கமின்றி கொரோனா சிகிச்சை கட்டணம்-உரிமத்தை ரத்து செய்து அதிரடி

 



கொரோனா வைரஸ் தொற்றுக்கு அளிக்கப்படும்  சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 300 க்கும் மேற்ப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல்,  அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது.

 

அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

 

ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் இந்த ஆணைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பல லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன.

 

 இதனைத் தொடர்ந்து புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் கூடுதலாக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள்  மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 

இதில் 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 18 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறையால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.