வெள்ளை அரிசிக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தவிட்டு அரிசி- குமரி அனந்தன் கோரிக்கை


காந்தி பேரவை தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன், முதல்-அமைச்சருக்கும், உணவுத்துறை அமைச்சருக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டில் அவர் பெரிதும் விரும்பி சாப்பிட்ட தவிடு நீக்காத அரிசியை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.


நமது பாட்டிமார்கள் நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அரிசியை தந்தார்கள்.இப்போது அவை கிடைப்பது அரிது.


ஆலைகளிடம் உமிமட்டும் நீக்கி, தவிட்டோடு இருக்கும் அரிசி மட்டுமே கொடுங்கள் என்று அரசு சொன்னால் தருவார்கள். தவிட்டு அரிசியை சமைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல் வராது. இது நீரை நன்கு பிரிக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். நீரிழிவு நோய் வராது. 


இயற்கை நமக்கு அன்பளிப்பாக தந்த நெல்லில் சத்துள்ள பாகமான தவிட்டை நீக்கி நாமே நோயை வருவித்துக்கொள்ள வேண்டுமா? எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் தவிட்டு அரிசியை கொடுக்க வேண்டும். அதேபோல் பள்ளிகளிலும் சமைக்கும் போது தவிட்டு அரிசியை பயன்படுத்த வேண்டும்.


தமிழக அரசு ரேஷன் கடைகளில் தவிட்டு அரிசியை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.