தமிழகத்தில் சிறப்பு ரயில்கள். முன்பதிவு நாளை தொடங்கும்.

 தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .அந்த வகையில் 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களும், வியாழக்கிழமையை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது.


சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும், ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


ரயில் நிலையத்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் 90 நிமிடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும், அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏசி கம்பார்ட்மென்டில் பயணம் செய்பவர்களின் பெட்டிகளில் வெப்பநிலை தேவையான அளவு மட்டும் வைக்கப்படும் என்றும், தலையணை, போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.