63 நாயன்மார் பட்டியல்-கோச் செங்கட் சோழ நாயனார்

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” 


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


கோச் செங்கட் சோழ நாயனார்சோழமண்டலத்திலே, சந்திரதீர்த்தத்தின் பக்கத்திலே ஒரு வனம் இருந்தது. அதிலே நின்ற ஒரு வெண்ணாவன் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் வெளிப்படலும், ஒரு வெள்ளானை அதைக்கண்டு, நாடோறும் புழைக்கையினாலே தீர்த்தம் முகந்து ஆட்டி, புஷ்பங்களைச் சாத்தி, வழிபட்டு ஒழுகுவதாயிற்று.


அதனால் அந்த ஸ்தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று. அறிவினையுடைய ஒரு சிலந்தி, அந்தச் சிவலிங்கத்தின் மேலே சருகு உதிராவண்ணம், தன் வாய்நூலினாலே மேற்கட்டி செய்தது.


சிவலிங்கத்தை வணங்கவந்த வெள்ளானை அதைக்கண்டு, அது அநுசிதம் என்று நினைந்து, அதைச் சிதைக்க; சிலந்தி மீளவும் மேற் கட்டி செய்தது, வெள்ளானை மற்றநாளும் அதைச் சிதைத்தது.


அது கண்டு சிலந்தி "எம்பெருமான் மேலே சருகு உதிராவண்ணம் நான் வருந்திச் செய்த மேற்கட்டியை இது அழிக்கலாமா" என்று கோபித்து, வெள்ளானையினது புழைக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வெள்ளானை கையை நிலத்திலே மோதிக்கொண்டு விழுந்து இறந்தது.


கையை நிலத்திலே மோதியபோது, அதனுள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது வெள்ளானை சிவகணநாதராகித் திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானைச் சேவித்துக் கொண்டிருந்தது.


சுபதேவனென்னுஞ் சோழமகாராஜன் தன் மனைவியாகிய கமலவதியுடன் சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை உபாசனை செய்துகொண்டிருக்கு நாளிலே; கமலவதி புத்திரபாக்கியம் இன்மையால் வரம் வேண்ட; அந்தச் சிலந்தி சபாநாயகரது திருவருளினாலே அவளுடைய வயிற்றிலே மகவாய் வந்து அடைந்தது.


கமலவதிக்குப் பிரசவகாலம் அடுத்தபொழுது, சோதிடர்கள் "இந்தப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாகில், முப்புவனங்களையும் அரசாளும்" என்றார்கள்.


கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொல்ல; அங்குள்ளவர்கள் அங்ஙனங் கட்டித் தூக்கி, சோதிடர்கள் குறித்த காலம் அணையக் கட்டவிழ்த்து விட்டார்கள்.


கமலவதி பிள்ளையைப் பெற்று, அது பிறக்குங்காலந் தாழ்த்தமையாற் சிவந்த கண்களையுடையதாய் இருத்தல் கண்டு, "என்கோச்செங்கண்ணானோ" என்று சொல்லிக்கொண்டு, உடனே இறந்துவிட்டாள்.


சுபதேவன் அப்புதல்வரை வளர்த்து முடிசூட்டி, அரசை அவரிடத்தில் ஒப்பித்து, தான் தவஞ்செய்து சிவலோகத்தை அடைந்தான்.


கோச்செங்கட்சோழநாயனார் பரமசிவனது திருவருளினாலே பூர்வசன்ம வுணர்ச்சியோடு பிறந்து, சைவத்திருநெறி தழைக்க அரசியற்றுவாராகி, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவிக்கத் தொடங்கினார்.


திருவானைக்காவிலே தாம் முன்னே அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார்.


மந்திரிகளை ஏவி, சோழநாட்டில் வெவ்வேறிடங்களிலே சிவாலயங்கள் கட்டுவித்து, அவ்வாலயங்கடோறும் பூசை முதலியவற்றிற்கு நிபந்தங்கள் அமைத்தார்.


சிவனருளால் முற்பிறப்புணர்ச்சி யோடே பிறந்து வளருங் கோச்செங்கணான் தான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தான் முற்பிறப்பிற் பணிபுரிந்த திருவானைக்கா வெண்ணாவலடி முதற் பலவேறிடங்களிற் சிவாலயங்கள் அமைக்குஞ் சிவபுண்ணியப் பணியிலீடுபடுவாராயினர்.


அது அவர் புராணத்தில், "கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாமிக் குவலயத்தில் ஆதிமூர்த்தி அருளால்முன் அறிந்து பிறந்து மண்ணாள்வார் பூதநாதன் தான்மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள் காதலோடும் பலஎடுக்குந் தொண்டு புரியுங் கடன் பூண்டார்" -


"ஆனைக்காவில் தாம்முன்ன மருள்பெற்றதனை யறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார். ஞானச்சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ் சிறக்கப் பானற்களத்துத் தம்பெருமா னமருங் கோயிற் பணிசமைத்தார்" என வரும்.


முன்னைப் பிறப்பில் திருவானைக் காவில் தாம் புரிந்த சிவப்பணிக்கு யானை இடையூறு விளைத்தது போல் இப்பிறப்பில் தாமமைக்குந் திருக் கோயில்களிலும் அகஸ்மாத்தாக யானை புகுந்து தீங்கு விளைக்குஞ் சார்பினைத் தடுக்கு முகமாக இந்த நாயனார் யானை உட்புகுதற் கியலாத கோயில்களாம்படியான மாடக் கோயில்களாகத் தமது திருக்கோயில்கள் எல்லாவற்றையும் அமைத்திருத்தலும் முன்னறிந்து பிறந்து மண்ணாள்வார் என இவர் பற்றிச் சேக்கிழார் நாயனார் கூறியுள்ள இலக்கணத்துக்கு நிதர்சனமாகும்.


நாடு முழுவதிலும் வேண்டுமிடங்கள் தோறும் கோயில்கள் அமைத்து அவ்வவற்றுக்கு வேண்டும் நிபந்தங்களும் ஒழுங்கு செய்தபின் சிதம்பரத் தலத்திற் பேரன்பு தலைப்பட்டு வழிபாடுகளாற்றி அங்குள்ள தில்லை வாழந்தணர்களுக்கு மாளிகைகளும் அமைத்துக் கொடுத்து வாழ்நாள் முழுவதுஞ் சிவாலயத் திருப்பணியே கண்ணாகக் கொண்டிருந்து தில்லையம்பலவர் திருவடி நிழற்கீழ் அமர்ந்தார் என நிறைவுறுகின்றது இந்த நாயனாரின் புனித வரலாறு.


பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்து கொண்டிருந்து, சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.


இவர் அமைத்த மாடக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாதலால் தலச்சிறப்போடு இவர் சிவப்பணி மாண்பும் பாடற் பொருளாயிற்று. தேவார ஆசிரியர் மூவர் பாடல்களிலும் அது காணப்படும்  • தவப்பேறும், மெய்யுணர்வுமுடைய உயிர்கள் யாவும் இறைவனை வழிபடும் இயல்பின.

  • மெய்யாடியார்க்கு முற்பிறப்புணர்ச்சி வாய்த்தலுண்டு

  • சிவதொண்டு விட்டகுறை தொட்டகுறை எனும் முறைவழிப்படுவதாம்


குருபூஜை


கோச் செங்கட் சோழ நாயனார் குருபூஜை  மாசி  மாதம்  சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


திருச்சிற்றம்பலம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்