சப்த விடங்க தலங்கள் - திருக்குவளை அவனி விடங்கர் கோயில் பகுதி 2

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


திருக்குவளை அவனி விடங்கர்  கோயில் பகுதி 2


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 123வது தலம்.



மூலவர், வெண்மணலாலான லிங்கம். மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். எப்போதும் செப்புக்குவளை சார்த்தியே காணப்படுகிறார். இந்த தேவஸ்தானம் தியாகராஜஸ்வாமி தேவஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.


சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை, திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார்.


பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.


இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.


இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார்.


மிக அழகிய, சற்றே பெரிய கோயில். எதிரில் குளம் உள்ளது. கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதி. அழகான ராஜ கோபுரம்.  உள்ளே நுழைந்தால் வலப்புரம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரம். நேரே தெரிவது கோளிலிநாதர் சன்னிதி. தென்பால் தியாகேசர். எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் தியாகவினாயகரும், விஸ்வநாதரும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீஸர் முதலிய சன்னிதிகளும் உள்ளன.


அழகிய முருகன் சன்னிதி. அது தாண்டி நால்வர், மஹாலட்சுமி சன்னிதிகள். அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது. தனிக்கோயிலாகவுள்ளது. சபாநாதர் தரிசனம் அழகானது. இது கோளிலித்தலமாகையால் நவக்கிரகங்கள் ஒருமுகமாக தென்திசையை நோக்கியுள்ளன. இறைவன் கர்பக்ரகிரத்தின் வடபுறம் அர்த்தனாரீஸ்வரர், பிரம்மா, துர்கை மற்றும் உமாமகேஸ்வரர் உள்ளனர்.


தென்புறம் நடராஜர், தக்ஷிணாமூர்த்தி உள்ளனர். இரண்டாம் கோபுரத் தென்மதிலில் பஞ்ச பாண்டவர் பூசித்து வழிபடும் கோலமும், பிரம்மா வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.


சுவாமி அம்பாள் கோயில்களுக்கிடையில் அகத்தியர் பூசித்த இலிங்கம் உள்ளது. அது தனியாக கர்பகிருக, அர்த மண்டபத்துடன் உள்ளது. சண்டீசர் சன்னிதியும் உள்ளது.


பகாசுரனை கொன்ற பாவம் தீர பீமன் இங்கு வழிபட்டான் என்பது வரலாறு. முன் கோபுரத்தில் பீமன் வழிபட்ட லிங்கம் உள்ளது. ஆலயத்துக்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கிஒடுகிறது. எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புரம் இந்திர தீர்த்தமும், மேற்புரம் அகத்திய தீர்த்தமும், சிவலோக வினாயகர் கோயிலருகில் வினாயக தீர்த்தமும் உள்ளன.


இக்கோயிலுக்கு சடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலிய சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் செய்துள்ளதை, கல்வெட்டுச்சான்று எடுத்துரைக்கின்றது.


சிறப்பு



  • குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.

  • நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன


தேவாரப்பதிகம்:


பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குவினான் குளிரும் பொழில் கோளிலி நிலவினான் தனை நித்தல் நினைமினே. –திருநாவுக்கரசர்


திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.


பிரார்த்தனை:


நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:


வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


திருத்துறைப்பூண்டி – நாகை சாலையில் அமைந்துள்ள தலம். திருவாரூரிலிருந்தும், நாகையிலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி இருப்புப் பாதையில், திருநெல்லிக்காவலில் இறங்கி, கிழக்கே 10 கீ.மீ தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.


நாளை திருவாய்மூரில் “நீலவிடங்கர்    தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்