தினம் ஒரு நாயன்மார் வரலாறு : எறிபத்த நாயனார் (பகுதி 3)

நேற்றைய  தொடர்ச்சி  எறிபத்த நாயனார் (பகுதி 3)


நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு



பட்டத்து யானையும் குத்துகோற்காரனும், யானைப்பாகனும் கொலையுண்டு கிடப்பது கண்டு மனம் கலங்கிய மன்னர், அவர்கள் பக்கத்தில் கோடாரியும் கையுமாக கோபத்தோடு நின்று கொண்டிருக்கும் எறிபத்தரையும் பார்த்தார்.


நெற்றியிலே திருநீறு ! மேனியிலே திருநீறு! தலையிலே, கையிலே, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள். இப்படியாக சிவக்கோலத்துடன் நின்று கொண்டிருக்கும் எறிபத்தரைப் பார்த்தும் மன்னருக்கு எதுவுமே சரியாக விளங்கவில்லை. மன்னர் அவரைத் திருத்தொண்டராக எண்ணினாரே தவிர, கொலைகாரராக மட்டும் எண்ணவே இல்லை !


அரசர் அங்கு கூடியிருந்த மக்களிடம் இக்கொலை களைச் செய்தது யார் ? என்று கேட்டார். அனைவரும் எறிபத்தரைச் சுட்டிக்காட்டி வேந்தே ! இவர்தான் இக்கொலைகளைச் செய்தவர் என்றனர். வீரக்கனல் அணிந்து வெண்புரவி மீது அமர்ந்திருந்த புகழ்ச்சோழர் வியப்பு மேலிட, எறிபத்தரைப் பார்த்தார்.


வீரமும் கோபமும் நிறைந்திருக்கும் அவ்வடியாரது கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்த மன்னருக்கு, இத்தகைய கொலைகளைச் செய்யும் அளவிற்கு இத்தொண்டருக்குக் கோபம் வரவேண்டுமாயின் பட்டத்து யானை எவ்வளவு பெரும் தவறு செய்ததோ! இல்லாவிடில் இத்திருத்தொண்டர் எதற்காக இச்செய்கைளைச் செய்யப் போகிறார் ? என்பதனை ஊகித்துணர்ந்தார்.


அரசர் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். எறிபத்தர் முன்னால் சென்று அவரை வணங்கினார். சுவாமி ! இங்கு நடந்தவற்றைப் பற்றி அடியேன் எதுவும் சரியாக அறிந்திலேன். உங்கள் முகத்தைப் பார்த்ததும்தான் உண்மை புரிகிறது :


தங்கள் திருவுள்ளம் வருந்தும்படியான செயல் ஒன்று இங்கு நடந்துள்ளது என்று, ஐயனே ! நடந்த தவற்றுக்குப் பாகனையும், யானையையும் தண்டித்தது போதுமா? அருள்கூர்ந்து உத்தரவிடுங்கள் என்று பணிவுடன் கேட்டார்.


மன்ன! மதக்களிற்றையும், பாகனையும், குத்துக்கோற்காரனையும் கொன்றேன். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? பட்டத்து யானை இறைவனுக்குப் பூச்சுமந்து சென்ற சிவகாமியாண்டார் என்னும் அந்தணரின் கையிலிருந்த மலர்க்கூடையைப் பிடித்து இழுத்து நிலத்தில் கொட்டி நாசப்படுத்தியது. இத்தகைய தகாத செயலைப் பட்டத்து யானை செய்வதற்குக் காரணமாக இருந்த மற்றவர்களையும் கொன்றேன் ! எறிபத்தர் சொன்னதைக் கேட்டு மன்னர் மேலும் வருந்தினார்.


பக்தியோடும், பயத்தோடும் மீண்டும் அந்த அடியாரை வணங்கினார். மன்னர் மனதில் தம் மீது ஏதோ ஒரு பெரும் பழி வீழ்ந்துவிட்டது போன்ற பெரும் சுமை ஏற்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பட்டத்து யானை என்னுடையது. அது செய்த தவற்றிற்கு நான்தான் காரணம். தங்களைப் போன்ற சிவனருட் தொண்டர்களுக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்துமாறு நடந்து கொண்ட நான் இனியும், இந்நில உலகில் இருந்து என்ன பயன் ? நானும் தங்களால் தண்டிக்கப்பட வேண்டியவன்தான். ஐயன் தயவு செய்து என்னையும் இவ்வாளால் தண்டியுங்கள் என்று கூறிய அரசர் தம்மிடமுள்ள உடைவாளைக் கழற்றி அடியாரிடம் நீட்டினார்.



மன்னரின் ஈடு இணையற்ற உத்தமமான அன்பிற்கு முன்னால் தம் பக்தி எம்மாத்திரம் என்று எண்ணி, நிலை தடுமாறிய எறிபத்தர். சட்டென்று உடைவாளை மன்னரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்.


எறிபத்தர், தன்னையும் கொலை செய்வதற்காக வேண்டிதான் உடைவாளைப் பெற்றுக் கொண்டார் ! என்று தமக்குள் ஒரு முடிவிற்கு வந்த மன்னர், எறிபத்தரைப் பார்த்து, ஐயனே! நான் செய்த பிழை என்னை விட்டு நீங்கியது என்று கூறித் தலைவணங்கி நின்றார்.


மன்னரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து மனம் பதறிப்போனார் எறிபத்தர். அவரை தசை எல்லாம் ஒடுங்க, செய்வது யாது ? என்று கலங்கி நின்றார். அவரது உள்ளத்தில் இனம் தெரியாத ஒருவித உணர்ச்சி வெள்ளப் பிரவாகம் போல் ஓடியது ! ஐயையோ! எவ்வளவு தவறான செய்களைச் செய்துவிட்டோம். சமன் செய்து சீர் தூக்குவது போல், நேர்மை குன்றாது ஆட்சி புரியும் மன்னனின் மாண்பினை உணராது போனேனே! உயர்ந்த பண்பும், பக்தியும் கொண்டுள்ள தொண்டருக்குத் துரோகம் செய்து விட்டேனே!


திருவெண்ணீற்றுக்குத் தம் உயிரையே இழக்கத் துணிந்த இந்த பக்தனுக்கா எனது பாதகம் ! இஃது அடுக்கவே அடுக்காது. இவர் அரசர் அல்ல, அடியார்களின் அன்பர். இவரது பட்டத்து யானையையும் மற்றவர்களையும் கொலை செய்தேனே ! கொற்றவனாக இருந்தும் எனது கொலை பாதகத்திற்குச் சற்றும் தண்டனை கொடுக்க எண்ணாது தம்மையும் அல்லவா மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவர் அருள் வடிவமானவர் ! அன்பின் திருவுருவமானவர் ! அகிலமே பேற்றுதற்குரிய திரு அவதாரச் செம்மல் !


அரனாருக்கும், அவரது அடியார்களுக்கும் உண்மையிலேயே துரோகம் செய்தவன் நானேதான் ! நான் உலகில் வாழவே கூடாது. மடியவேண்டியவன். இவ்வாறெல்லாம் தமக்குள் எண்ணிப் புண்பட்ட எறிபத்தர், கையிலிருந்த உடைவாளால் தம் கழுத்திலே வைத்து அறுத்துக் கொள்ளப் போனார்.


எறிபத்தரின் செயல் கண்டு திடுக்கிட்டுப் போன மன்னவர் கற்றறிந்த அறிவுச் செம்மலே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் ? இது கொடுமை, கொடுமை என்று கூறியவாறே, அவரது கையிலிருந்த உடைவாளை பற்றிக் கொண்டார். அவ்வமயம் அனைவரும் வியக்குமாறு விண்ணிலே பொன்னொளி பிறந்தது. எம்பெருமானின் திருவருளினால் அசரீரி வாக்கு மண்ணில் இருந்தோர் கேட்கும் வண்ணம் எழுந்தது. அன்பிற் சிறந்தவர்களே !


உங்களுடைய தொண்டின் பெருமையை உலகெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டே இன்றைக்கு இவை அனைத்தும் நடந்தன. இறைவனின் தெய்வ வாக்கைக் கேட்டு எறிபத்த நாயனாரும், மன்னரும் இறைவனைத் தியானித்தபடியே நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்.


இறைவனின் திருவருளால் இறந்த உயிர்கள் அனைத்தும் உயிர் பெற்றன. அதுபோலவே சிவகாமியாண்டார், பூக்கூடையிலும் பூக்கள் தானாகவே நிறைந்திருந்தன. சிவகாமியாண்டார் எம்பெருமானின் திருவருளை நினைத்து மகிழ்ந்தவாறே, ஆனிலை அப்பரை வழிபடப் புறப்பட்டார். இந்நிகழ்ச்சி மன்னரையும், எறிபத்த நாயனாரையும் நண்பர்களாக்கியது. எறிபத்தர் வாள் களைந்து, சோழமன்னரின் தாள் பணிந்தார். சோழரும் அவரது அடி வீழ்ந்து வணங்கினார்.


சோழமன்னர், பட்டத்து யானை மீதேறி அரண்மனைக்குப் புறப்பட்டார். எறிபத்த நாயனார், நிலவுலகில் நெடுங்காலம் வாழ்ந்து திருத்தொண்டுகள் பல புரிந்தார். இறுதியில் எம்பெருமானுடைய சிவகணத் தலைவராகிப் பேரின்ப வீட்டில் வாழ்ந்தார். அதுபோலவே புகழ்ச் சோழனும் சிறப்புடன் ஆட்சி புரிந்து பேரின்ப வீடு கண்டான்.


சிவகாமியாண்டாரும் பரமனுக்குத் திருத்துழாய்க் கைங்கரியம் செய்து பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து பிறவாப் பெருவாழ்வு பெற்றார்.


குருபூஜை


எறிபத்த நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


வேல்நம்பி எறிபத்தர் அடியார்க்கும் அடியேன்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி.  ஓம்  நமசிவாய


பக்தியுடன் நாளை தொடரும்   மோகனா செல்வராஜ்