கண்ணப்ப நாயனார் நேற்றைய தொடர்ச்சி (3)

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.


திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார்.   



நேற்றைய தொடர்ச்சி


அந்தணரின் அவதி


அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார்.


சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார்.


சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.


வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார்.


மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார்.


வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.


பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார்.


மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.


குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது


இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார்.


அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார்.


இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார்.


நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன்  வந்த  நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர்.


"அவன் நமக்கினியன்" - காளத்திநாதர்


சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார்.அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார்.


அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது;


அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார்.


நாளை தொடரும்


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்