நாயன்மார் வரலாறு : ஏனாதிநாத நாயனார் (பகுதி 2)

நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு


சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்


விபூதி மேற் பத்தி மிகுதி -ஏனாதிநாத நாயனார்நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது ! அதிசூரன் நேர் பாதையில் நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதினான். அதற்காக வேண்டி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.


ஒருநாள் அதிசூரன், ஏவலாளன் ஒருவனை ஏனாதிநாதரிடம் அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான்.


அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நான் குறித்து நேரம் கணித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் சேதியும் சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார்.


குறித்த நாளும் வந்தது ! அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான்.


போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் , தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர்.


புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதிநாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான் அதிசூரன்.


ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள்,


அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும்,கேடயத்தையும் விலக்கினான்.


வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திருக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன் ! பகைவன் என்று போரிட வந்தேனே ! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒருபொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே ! இவர் சிவத்தொண்டரே தான்.


இவரோடு, இனியும் போரிடுவது தகாத செயல் ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன் ! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதிநாத நாயனார், தம் கையிலிருந்த வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.


அத்தருணத்தில் , நாயனாருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும். நிராயுத பாணியயைக் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும் ! அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படாவண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பதுபோல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.


பின்னர் சொல்லவும், வேண்டுமோ ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. அதிசூரனும் ஓடி ஒளிந்தான்.ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது ! எம்பெருமான் உமையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார்.


பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தெடர்புகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.


திருவெண்ணீறு அருள்மயமானது. எம்பெருமானின் திருமேனியால் எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்க்கு அமர வாழ்வு கிட்டும்.


உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும். இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருவெண்ணீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டிவந்த பேரன்பைத்தான் என்னென்பது ?


குருபூஜை


ஏனாதி நாத நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்.


பக்தியுடன் நாளை தொடரும்


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. ஓம் நமசிவாய


பக்தியுடன்  மோகனா செல்வராஜ்