எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட சத்துணவு மாணவ, மாணவிகளுக்கு-வங்கிக் கணக்கு-தொகை

 தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.


கரோனா நோய்த்தொற்றால், முன்னெச்சரிக்கை கருதி, அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. இன்று ஜூன் 27 ஆம் தேதி சனிக்கிழமையுடன் 104 நாள்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை.


உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப்  பொருள்களாகவோ, உணவூட்டத்தொகையாகவோ வழங்க, தமிழ்நாடு சமூகநலத் துறையின் ஆணையர் (ந.க.எண்-10884-சஉதி-நாள்-ஜூன் 10 -ஆம் தேதி) உத்தரவிட்டு, அதன் உத்தரவு நகல் வாட்ஸ்ஆப் மூலம் ஜூன் 22 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிகள் செயல்படாத நாள்களுக்கான சத்துணவுக்குரிய தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி விடுவதெனத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்தத் திட்டம் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களது நேரடி வங்கிக்கணக்கு எண்கள், வங்கிகளின் ஐஎப்சி கோட், எம்ஐசிஆர் கோட், வங்கியின் பெயர், கிளை பெயர் என்று அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


பின்னர், ஒருசில வாரங்களுக்குள், தமிழக அரசின் உணவூட்டத் தொகையானது அந்தந்த மாணவரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது.