குருபகவானின் முக்கிய ஸ்தலங்கள்

 


           *குருபகவானின் முக்கிய ஸ்தலங்கள்...*


*குருபெயற்ச்சி 13-11-2021.*


குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது. ஒருவரது ராசிக்கு, 1,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது, குருபகவானை வழிபட்டு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.


*1. திட்டை :-*


தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் திட்டை என் ற திருத்தலம் இருக்கிறது. தென்குடித் திட்டை என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவன் பெயர் 'உலக நாயகி உடனுறை வசிஸ்டேஷ்வரர்’. இத்தலத்தில் குருபகவானுக்காகத் தனிச் சன்னிதி இருப்பது தனிச்சிறப்பு. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி மீது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தானாகவே ஒரு சொட்டு நீர் விழுந்துகொண்டிருப்பது தனிச்சிறப்பு. மேல்தளத்தில் சந்திரகாந்தக்கல் அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.


*2. திருச்செந்தூர் :-*


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது.


*3. ஓமாம்புலியூர் :-*


சிதம்பரத்துக்கு தென்மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உல்ளது. இறைவன் பெயர்’ துயர் தீர்த்த நாதர்’. இறைவி பெயர் பூங்கொடி நாயகி. இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய தலம் இது. இத் தலத்திற்கு ‘பிரணவ வியாக்கியான புரம்’ என்ற பெயரும் உண்டு. புலி ஒன்றுக்கு அஞ்சிய வேடன் வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துப்போட, கீழே இருந்த சிவலிங்கத்தின்மீது வில்வ இலைகள் வி ழுந்துகொண்டிருந்ததால், அவனுக்கு சிவனருள் கிட்டிய தலம் இது. இங்கு தட்சிணாமுர்த்திஉயர்ந்த பீடத்தில் காணப்படுகிறார்.


*4. திருலோக்கி :-*


தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காளையின்மீது இறைவனும் இறைவியும் வீற்றிருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அற்புதச் சிற்பம் அமைந்துள்ள திருத்தலம் இது. இறைவனை வழிபட்ட குருபகவானை இங்கு வழிபட ஏற்றம் பல பெறலாம்.


*5. ஆலங்குடி :-*


கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இறைவன் ஆலகால விஷம் உண்டதால், ஆலங்குடி எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் ஈசன் பெயர்’ ஆபத்சகாயேஸ்வரர்’, அம்மன் பெயர்’ ஏலவார் குழலி’. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத் தலத்தில்தான் தேவி தவம் செய்து இறைவனை மணந்துகொண்டார். தேவி திருமணம் செய்துகொண்ட இடம் இப்போதும் ’திருமண மங்கலம்’ என்று அழைக்கப்படுகின்றது.


கஜமுகாசுரனால், தேவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளைக் களைந்து காத்தமையால், இத்தல விநாயகர் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஆதிசங்கரர் குருபகவானிடம் மகாவாக்கிய உபதேசமும், 64 கலைகள் பற்றிய ஞானமும் பெற்றதாக வரலாறு. ‘ சாயரட்சை’ என்கிற மாலை நேரத்தில் இத்தலத்து இறைவனை வழிபடுவது சிறப்பு. குருபகவானுக்குரிய விஷேஷத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது.


கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து , 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.


*6. மயிலாடுதுறை :-*


இத் தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


*7. தேவூர் :-*


திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இத் தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்றுபெயர்.  குருபகவான் வழிபட்ட தலம் இது. இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னிதி இருக்கிறது.


*8. கும்பகோணம் :-*


கும்பகோணத்தில், மகா மகக்குளமானபொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும், காசி விசாலாட்சி, தேனார் மொழி என்றும் அழைக்கிறார்கள்.


🙏ஓம் குருபகவானே போற்றி போற்றி...


திருமதி மோகனா செல்வராஜ்