புதிய காவல் ஆணையராக பதவி ஏற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி

   

கட்டபஞ்சாயத்து, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் பேட்டி

காவல் ஆணையராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றப்பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:


“நான் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளேன், இன்றைய சூழ்நிலையில் கரோனாவுக்கு எதிராக போலீஸார் முன்களப்பணியாளர்களாக அனைவருக்கும் உதவும் வகையில் செயல்படுகிறார்கள்.


முதல்வரின் சிறந்த ஆட்சிக்கு உதவும் வண்ணம் செயல்படுவோம். சென்னை காவல்துறை சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


வார முழு ஊரடங்கில் அரசு வழிகாட்டு முறைகளை கொடுத்துள்ளார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முழு ஊரடங்கில் மக்கள் வெளியே வராவண்ணம் பாதுகாப்பு அளிப்போம். . போலீஸார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


 போலீஸாருக்கு சிறிய அறிகுறி தெரிந்தாலும் அவர்களுக்கு பரிசோதனை. தொற்று உறுதியானால் தனிமைப்படுத்துதல் வீடு அல்லது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்போம். தனிமையில் இருக்கும் போலீஸாரிடம் தொடர்ந்து தைரியம் அளிக்கும் வகையில் பேசுவோம். 


கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும். நான் போதை பொருள் கடத்தல் பிரிவில் பணியாற்றியுள்ளேன். ஆகையால் கடும் நடவடிக்கை எடுத்து முழுமையாக கட்டுப்படுத்துவோம்.


ஊரடங்கில்  வெளியில் வரும் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லி வெளியில் வருவதை கட்டுப்படுத்துவோம். ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க தடையில்லை. ஆன்லைன் மூலம் தாராளமாக புகார் அளிக்கலாம்.போன் மூலமும் புகார் அளிக்கலாம், காவல் நிலையங்களிலும் அளிக்கலாம். 


வீடியோகால் மூலம் காவல் ஆணையர் பொதுமக்கள் புகாரை அளிப்பதை பார்த்து அது குறித்து கேட்டறிந்து அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பார்க்கிறேன் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.