இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


பாவங்கள் போக்கும் சூரிய வழிபாடு... ரத சப்தமி விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் ‘சப்தமி’ திதியாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரையான 6 மாத காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை மாதம் முதல் ஆனி வரையான 6 மாதத்தை ‘உத்திராயன புண்ணிய காலம்’ என்றும் அழைப்பார்கள். 

தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கி பயணிக்கும் சூரிய பகவான், உத்திராயனம் தொடங்கும் தை மாதம் முதல் நாளில் வடக்கு நோக்கி திரும்புவார். 

அதனால்தான் தை முதல் நாளில் அவருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். 

தை முதல் நாளில் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினாலும், ஏழாவது நாளான சப்தமி தினத்தன்றுதான், அவரது 7 குதிரை பூட்டிய தேர், முழுமையாக வடக்கு நோக்கி திரும்புகிறதாம். 

எனவேதான் தை மாதம் வரும் சப்தமி திதியானது, ‘ரத சப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.

தேர்க்கோலம், ஏழு எருக்க இலை, ஆதித்ய ஹிருதயம்... அற்புதங்கள் அருளும் ரதசப்தமி வழிபாடுக்கான வழிமுறைகள் .

சூரிய தேவனை வணங்கி சுகவாழ்வைப் பெறுவோம்.

உலகில் நாம் செய்யும் செயல்கள் மட்டுமல்ல செய்யாத செயல்களும் நமக்குப் பாவங்களையும் புண்ணியங்களையும் ஏற்படுத்தும் என்கின்றன சாஸ்திரங்கள். 

தீய செயல்கள் செய்ய வாய்ப்பிருக்கும்போது அவற்றைச் செய்யாமல் தவிர்ப்பதன்மூலம் நல்வினைகளையும் நற்செயல்கள் செய்ய வாய்ப்பிருக்கும்போது அதைச் செய்யாமல் இருப்பதன்மூலம் தீவினைகளையும் நம்மையறியாமல் நாமே உருவாக்கிக் கொள்கிறோம். 

இப்படிப்பட்ட இந்த உடலால் உருவான நல்வினை தீவினைகளை இந்த உடலாலேயே அனுபவித்துக் கடப்பதன் மூலம் பிறவியில்லாப் பெருவாழ்வைப் பெறலாம்.

சூரியபகவான்

சமண சமயத்தில் ஒரு கோட்பாடு உண்டு. உடல் எவ்வளவு துன்புற்று மரணத்தை எய்துகிறதோ அந்த அளவு அந்த ஆத்மா நேரடியாக முக்தியை அடையும் என்பதுதான் அது. 

அதற்காகத்தான் சமணத் துறவிகள் வடக்கிருந்து உயிர் துறக்கிறார்கள். 

ஆனால், நம் சனாதன தர்மத்தில் அத்தகைய தீவினைகளைத் தீர்க்க உள்ள எளிய வழிகளே விரத வழிபாடுகள். 

விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் நம் பாவங்கள் நீங்கி நன் நிலை பெறலாம் என்பது நம்பிக்கை. அப்படிப் பாவங்களைத் தீர்க்கும் ஓர் அற்புத விரதம் ரத சப்தமி விரதம்.

விஷ்ணு சகஸ்ரநாமம் - முக்திக்கு வழி

ஒவ்வொரு யுகத்திலும் முக்தியை அடைய மாறுபட்ட வழிகள் வகுக்கப்பட்டிருந்தன என்கிறது விஷ்ணுபுராணம். 

கிருத யுகத்தில் தியானம் தவம் ஆகியவற்றின் மூலமும் திரேதாயுகத்தில் வேள்விகள் மூலமும் துவாபரயுகத்தில் விக்கிரக ஆராதனையின் மூலமும் முக்தி என்னும் நன் நிலையை அடையலாம். 

ஆனால், கலியுகத்தில் இத்தனை பிரயாசைகளும் முயற்சிகளும் தேவையில்லை. 

இறைவனின் நாமத்தை சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்தாலே முக்தி கிட்டும் என்கிறது புராணம். `கெடும் இடராயவெல்லாம் கேசவா' என்பது ஆழ்வாரின் அமுதமொழி. 

இப்படி பகவானின் நாம மகிமைகளைச் சொல்லி ஆராதிக்கவே அம்புப்படுக்கையில் படுத்தபடி பீஷ்மாசார்யர், அந்த ஆதிமூலத்தின் ஆயிரம் நாமத்தை நமக்காக உபதேசித்துள்ளார். அதுவே, `விஷ்ணு சகஸ்ரநாமம்.'

விஷ்ணு சகஸ்ரநாமம்

பல தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமங்கள் இருந்தபோதும் சகஸ்ரநாமம் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஷ்ணு சகஸ்ரநாமமே. 

இதை வேதஸ்வரூபிணியான அன்னை லலிதாம்பிகையே இந்த உலகுக்கு விளக்கியுள்ளாள். ஆதிசங்கர பகவத் பாதாள் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத விரும்பினார். 

தன் சீடரை அழைத்து லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர ஏடுகளை அடுத்த அறையில் இருந்த நூலகத்திலிருந்து எடுத்துவரச் சொன்னார். சீடரும் போய் விஷ்ணு சகஸ்ரநாமத்தை எடுத்துவந்தார்.

மீண்டும் ஆதி சங்கரர் லலிதா சகஸ்ரநாமத்தை எடுத்துவரும்படிச் சொல்ல, மீண்டும் சென்ற சீடர் மறுபடியும் விஷ்ணு சகஸ்ரநாம ஏட்டை எடுத்துவந்தார். 

மூன்றுமுறை இப்படியே நடக்க, ஆதிசங்கரர், ``நான் சொல்வது என்ன... நீர் செய்வது என்ன? " என்று கேட்டார். அதற்கு அந்தச் சீடரும், ``நான் என்ன செய்வது சுவாமி, அங்கே ஒரு சிறுபெண் இருந்துகொண்டு 'விஷ்ணு சகஸ்ரநாமத்தை எடுத்துப்போ' என்று கட்டளையிடுகிறாள். அவள் சொற்களை மீற முடியவில்லை" என்றார்.

உடனே சங்கரர் தியானத்தில் அமர்ந்து அந்தப் பெண் பாலாம்பிகையாகத் தோற்றமளித்த லலிதாம்பிகையே என்றும் அன்னையின் விருப்பம் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு முதலில் பாஷ்யம் செய்ய வேண்டும் என்பதுவே என்றும் அறிந்துகொண்டார்.

பீஷ்மர் ஏன் அம்புப் படுக்கையில் வீழ்ந்தார்?

விஷ்ணு சகஸ்ரநாமத்தை நமக்கு அருளியவர் பீஷ்மர். குருக்ஷேத்திரப்போரில் பீஷ்மர் அர்ச்சுனனால் தாக்கப்பட்டு வீழ்ந்தார். உத்தராயனப் புண்ணியகாலம்வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் குருதி கசியும் உடலோடு பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசித்தார்.

பீஷ்மர் ஒரு புண்ணிய புருஷர். ஆனாலும் துரியோதனின் அரசில் பங்கேற்று அவன் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்ததால் உண்டான பாவங்களைப் போக்கிக்கொள்ள பீஷ்மர் இவ்வாறு அம்புப்படுக்கையில் வீழ்ந்தார் என்பது ஐதிகம்.

எருக்க இலை

அதேவேளையில் எல்லோருக்கும் தன்னைப்போல மனதிடமும் ஆன்ம பலமும் இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாக சாமானியர்களும் வாழ்வில் எளிதில் கடைப்பிடித்து மேன் நிலையை அடைய தர்மங்களை உச்சரித்ததுடன், தம் பாவங்களைப் போக்கிக்கொள்ளவும், உலக மக்கள் உய்வு பெறவும் விஷ்ணுவின் சகஸ்ர நாமங்களையும் எடுத்துரைத்தார். 

கண்ணன் உரைக்க அர்ச்சுனன் கேட்டது கீதை என்றால் பீஷ்மர் உரைக்கக் கண்ணன் உடனிருந்து கேட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். 

விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லிய காரணத்தினால் தன் பாவங்கள் நீங்கப் பெற்ற பீஷ்மரின் மேனியை, வியாச மகரிஷி சூரிய தேவனுக்குரிய எருக்கம் இலைகளால் அலங்கரித்தார்.

அந்த நிலையிலேயே சூரிய தேவனை வணங்கி பீஷ்மர் தியானத்தில் ஆழ்ந்து முக்தியும் பெற்றார். பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரதசப்தமி.

ஏழு வண்ணங்கள் பூட்டிய ரதத்தில் வருபவனுக்கு ரத சப்தமி.

இந்த உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன். 

சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். 

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் ஏழு வண்ணங்களே ஏழு குதிரைகளாகச் சுட்டப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.

ரத சப்தமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

நதி அல்லது சமுத்திரக் கரைகளில் நீராடுவது சிறப்புவாய்ந்தது. வீடுகளில் நீராடும்போது ஏழு எருக்கம் இலைகளை அட்சதையோடு சேர்த்துத் தலையில் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். இதன் மூலம் பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு தேக ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் பூஜை அறையில் தேர்க்கோலம் இடுவது வழக்கம். தேர்க்கோலமிட்டு அலங்கரித்து சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து விநியோகிக்க புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். 

ஆதித்ய ஹிருதயம் பாடி சூரியனை வழிபடுவது சிறப்புடையது. சூரிய பகவானை நாராயணனின் அம்சம் என்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். 

சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். 19.02.2021 ரதசப்தமி.

சூரிய தேவனை வணங்கி சுகவாழ்வைப் பெறுவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்