இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் தொடங்கிய விதம் பற்றிய பதிவுகள் :

முருகன் பெரும்பாலும் மலைகளில் கோவில் கொண்டிருந்தான்.

மக்கள் முருகனை வழிபட பொருட்களை ஒரு கம்பில் இரண்டு பக்கமும் மூங்கில் தட்டுகளில் வைத்து எடுத்துச்சென்றனர்.

அப்படி செல்வது மலை ஏற்றத்திற்கு வசதியாக இருந்தது.

அகஸ்தியர் தன் சிஷ்யன் இடும்பனிடம் கைலாயத்தில் இருந்து இரண்டு சிகரங்களை கொண்டுவர சொன்னார்.

இடும்பனும் காவடி வடிவில் இருசிகரங்களை எடுத்துவர முருகன் திருவிளையாடல் செய்து சிகரங்களை இறக்கிவைக்கச் சொன்னான்.

சிறுவன் கூறியதை அடுத்து சற்று இளைப்பாறி மீடண்டும் தூக்கமுடியவில்லை.அதுவே திருவாவினன்குடி (பழநி) மலை.

முருகன் கோவிலுக்கு செல்லும்போது, காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர். 

காவடியின் பெயரானது காவடித் தண்டின் இரு பக்கங்களிலும் கட்டப்படும் பொருட்களைக் கொண்டு அறியப்படுகிறது.

காவடி வகைகள் :

காவடியில் கட்டப்படும் பொருள் பால் என்றால் 'பால்காவடி" என்றும், பழங்கள் எனில் 'பழக்காவடி" என்றும் அறியப்படும். இவ்வாறாக பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, இளநீர்க்காவடி, வேல்காவடி, சர்க்கரைக்காவடி, சர்ப்பக்காவடி, மச்சக்காவடி என காவடியில் பல வகைகள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

இளநீர்க்காவடி :

இக்காவடி மட்டும் பழமையான தோற்றம் கொண்டு விளங்குகின்றது. கம்பு அல்லது பனை மட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு தண்டின் இரு புறங்களிலும் இளநீர்க் காய்களை கட்டிக்கொண்டு, மேள தாளங்களின்றி 'வேல் வேல்" 'வேல் வேல்" என்று கூறிக் கொண்டு எளிமையான முறையில் எடுத்து வரப்படுகிறது. இளநீர் காவடியில் எடுத்துவரப்படும் இளநீரானது இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மச்சக்காவடி :

மீனைக் காவடியில் கட்டிக்கொண்டு வருவது மச்சக் காவடி ஆகும். மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பிட்டு மண் சட்டியில் மஞ்சள் தண்ணீரில் போட்டுக் காவடித் தண்டில் கட்டிக்கொண்டு வருவர். காவடியை எடுத்து முடித்த‌ பின் கோவில் குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று காவடித் தண்டில் கட்டப்பட்ட மண் சட்டியைத் தலைக்கு மேலாக தூக்கி ஆட்டும் போது சட்டியில் உள்ள மீன் நீரில் துள்ளி விழும்.

சர்ப்பக்காவடி :

நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். ஊருக்கு வெளியே காட்டினுள் தங்கி ஆறு நாட்கள் உணவருந்தாமல் விரதம் மேற்கொண்டு இறைவனை வேண்டி வழிபடுவார்கள்.

ஆறாம் நாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்திற்கு பாம்பைக் கொண்டு வருமாறு கூறுவார். விரதம் இருப்பவர் தாரை, தப்பட்டை ஒலி முழங்க அவ்விடம் சென்று பச்சை மண் கலத்துள் பாம்பினை அடைத்து (பாம்பு தானாகவே வெளியே வந்து மட்கலத்துள் புகும் என்பர்) காவடியில் கட்டிக் கொண்டு வருவர். பின் முருகன் கோவிலின் அருகே உள்ள மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதியில் மட்கலத்தை திறந்துவிடுவர். பாம்பு வெளியேறி விடும்.

அலகு குத்துதல் :

நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

பறவைக் காவடி :

அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவார்கள்.

பால் காவடி :

பால்குடம் காவடியாக பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி :

மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு (பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்று சொல் வழக்கும் உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில் காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கும் காரணமும் இருக்கிறது.

மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான். 

ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.

அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கிய பொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார். 

தன்னுடைய வழிபாட்டிற்காக, கயிலையில் சிவ சக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்