அம்மா கிளினிக் திறப்பு விழாவில் சுவர் இடிந்து சிறுமிகள் காயம்: கைகூப்பி மன்னிப்பு கேட்ட அமைச்சர்

 கரூர் அருகே நடந்த அம்மா கிளினிக் திறப்பு விழாவில், நடைபாதை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர், இரு கைளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார். கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த கடவூர் வட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூரில் 30.01.2021 இரவு அம்மா கிளினிக் திறப்பு விழா நடந்தது. 

இந்த கிளினிக்கிற்காக புதிய கட்டிடம் கட்டப்படாததால் கொசூரில் உள்ள குள்ளாயிஅம்மன் கோயில் அருகே சமுதாயகூடத்தில் கிளினிக் திறக்கப்பட்டது. பஞ்சப்பட்டி அரசு சுகாதார நிலையம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

அம்மா கிளினிக்கை திறந்து வைக்க தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்தபோது கூட்ட நெரிசலில் நடைபாதை அருகில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சுவர் இடிந்து விழுந்ததில் கொசூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன் மகள் சசிதா (7), அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகள் சிந்துஜா(8) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதில் சசிதாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்ததோடு, இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். 

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த சமுதாய கூடத்தின் நடைபாதை தடுப்பு சுவர் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான் கூட்ட நெரிசலில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. காயமடைந்த 2குழந்தைகளுக்கு அரசு சார்பில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.