கமல் கட்சியில் இணைந்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி


நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. கட்சியில் இணைந்துள்ள சந்தோஷ் பாபுவை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் கமல்ஹாசன். கட்சியில் இணைந்த உடனேயே பதவி தேடி வந்துள்ளது.


ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார்


25 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், அவருக்கு "தமிழகத்தின் பெருமை என்ற விருதும் வழங்கப்பட்டது.


2017ம் ஆண்டில், பூம்புகார் அவருடைய தலைமையில் தேசிய மின்-ஆளுகை விருதையும், ஸ்கோச் ஸ்மார்ட் கவர்னன்ஸ் பிளாட்டினம் விருதையும் வென்றார். சந்தோஷ் பாபு வகித்த ஒவ்வொரு பதவியிலும், அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் 250 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும் புதுமுயற்சிகளையும் தொடங்கியுள்ளார்.


ஐ.டி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர். மேலும் அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பட்டம் பெற்றவர்.


தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தோஷ்பாபு தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்ட் ஆகி வருகிறது. அண்ணாமலை ஐபிஎஸ் பாஜகவில் இணைந்தார். ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்