இன்று முதல் திமுக கிராம சபை கூட்டங்கள் - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது திமுக. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை திமுக தொடங்க திட்டமிட்டுள்ளது.  

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் - சரிவுகள் - தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.