ஒப்புக்கு தூர் வாரப்பட்ட புழல் ஏரி கால்வாய்; 10 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்


தொடர் மழை, கிருஷ்ணா நீர் வரத்து ஆகியவற்றால், சென்னை, புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், உபரி நீர் கால்வாய் ஒப்புக்கு துார் வாரப்பட்டுள்ளதால், வெள்ள அபாயத்தில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் கொள்ளளவு 3.30 டி.எம்.சி., வடகிழக்கு பருவமழை வாயிலாக, புழல் ஏரிக்கு அதிகளவு நீராதாரம் கிடைக்கிறது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்தும், புழல் ஏரிக்கு நீர் எடுத்து வருவதற்கு, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக, கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.



தற்போது, ஏரியில், 2.40 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்வதால், ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது. புழல் ஏரி நிரம்பினால், அதில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவதற்கு, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கால்வாய், கிராண்ட்லைன், வடகரை, காவாங்கரை, வடப் பெரும்பாக்கம்,  கொசப்பூர், மணலி, சடையங்குப்பம் வழியாக, 11 கி.மீ., பயணித்து வங்க கடலில் கலக்கிறது.


கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, 93.5 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.


இந்த நிதியில், புழல் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்கும் வகையில், ஒப்பந்த நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப் பட்டன.


ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், முறையாக துார்வாரும் பணியை செய்யவில்லை. ஆங்காங்கே ஒப்புக்கு துார் வாரப்பட்டுள்ளது. இதனால், உபரிநீர் கால்வாயில், ஆகாயதாமரை, புல், புதர்கள் மட்டுமின்றி, கருவேல மரங்களும் ஆளுயரத்திற்கு வளர்ந்து கிடக்கிறது.


இந்த அடைப்பு காரணமாக, வெள்ள நீர் வெளியேற முடியாமல், பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. புழல் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றினால், வெள்ளநீர் வெளியேற வழியின்றி, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துவிடும்.


சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளும் மூழ்கும். இதனால், 2015ம் ஆண்டை போலவே, வெள்ள அபாயத்தில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல், அமைதி காத்து வருகின்றனர்.


கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில், இதே நிலை தான் உள்ளது. தேர்தல் நேரத்தில், இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பொதுப்பணித்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர்  தலையிட்டு, பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.