சிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் பற்றிய பகிர்வுகள்


முதல்வனாகிய சிவபரம்பொருள் அனைத்தையும் அறிவோன், முற்றறிவுடையன் (சர்வக்ஞன்), என வேதாகமங்களும் திருமுறைகளும் உரைக்க, மணிவாசகர் அவர்மேல் அறியமையொன்றை ஏற்றி உரைக்கின்றார்.


சிவன் அறியாத ஒன்று உண்டு. அதுதான் “தன் பெருமையைத் தான் அறியாத் தன்மை”!


சிவபெருமான் பேராற்றலும் பெருந்தலைமையும் உடைய மகாதேவன். எனினும் ‘காடுடைய சுடலைப் பொடிபூசி’ ‘தோலுடுத்து’ ‘நஞ்சுண்டு’, கூட்டொருவர் இல்லாமல் “தான் தனியனாக” இருக்கின்றான்.


அவன் தேவர்களுக்கெல்லம் தேவன் என்றால், தன் பெருமைக்குத் தகுந்தபடி பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, அடிசிலும் அமுதமும் அல்லவோ உணவாகக் கொண்டிருக்க வேண்டும்? நஞ்சை அமுதமாக உண்பானோ?. பித்தேறியவன் தான் தன்னந்தனியனாக அலைவான்.


சான்றோன் கலைஞானம் உடையவன் தன்னையொத்த சான்றோர் கூட்டத்தில் இருப்பதையே விரும்புவான். இத்தகைய மாறுபட்ட இயல்புகளை உடைய சிவன் எங்ஙனம் முதல்வனாவான்?


இந்த ஐயங்களுக்கு மறுமொழியாகத் திருவாசகத்தில் திருச்சாழல் என்னும் பதிகத்தில், ஒரு பெண்,


எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்,
தன் பெருமை தான் அறியாத் தன்மையன்” என்று கூறுகின்றாள்.


“எங்கள் சிவபெருமான் தன்னுடைய ஆடையாகப் பீதாம்பரத்தையோ அன்றித் தோலாடையையோ எதை அணிந்து கொண்டாலும், அறுசுவை உண்டியையோ அல்லது ஆலகால நஞ்சையோ எதைத் தன் உணவாகக் கொண்டாலும், அந்த உடை உணவு ஆகியவற்றால் வரும் பெருமை சிறுமைகளைப் பொருட்படுத்தாதவன்;.


அவன், உயிர்களின்மேல் கொண்ட பேரருள் ஒன்றைமட்டுமே திருவுள்ளம் கொள்பவன்; அவனுடைய பெருங்கருணையையும் பேராற்றலையும் அவன் இருப்பிடமும் உடுத்த தோலும்  உண்ட நஞ்சும் சுட்டுவன “ என்னும் கருத்தை அப்பெண்ணின் சொற்கள் விளக்குகின்றன.


சிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வதற்கு ஒரு புராண கதை உள்ளது


சிவபெருமான் இந்து மதத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார். மற்றக் கடவுள்கள் போல் அல்லாது உடல் முழுவதும் சாம்பல் பூசி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுபவர் சிவன். 


தன் இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும் பூசப்பட்ட சாம்பல் உடன் நமக்கு காட்சியளிக்கின்றார்


மனிதர்களின் பிறப்பு மற்றும் வாழ்விற்கு பொறுப்பான பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல் அல்லாமல், அவர்களை அழிக்கும் கடவுளாக உள்ளார் சிவன். அவர் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும்


 இதேபோன்று இவர் உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது. இறந்த பிறகு எஞ்சியிருப்பது சாம்பல் மட்டுமே


சிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வதனால், இறந்தவர்களின் தூய்மையை பறைசாற்றும். இந்த சாம்பல் உணர்ச்சிகள், காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது.


இவர் சாம்பலை உடல் முழுவதுமாய் பூசிக் கொள்வதற்கு காரணம் ஒரு புராண கதையொன்றில் கூறப்பட்டுள்ளது.


ஆதிசக்தியின் அவதாரமான மற்றும் தன் முதல் மனைவியுமான சதி, தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்ட போது சிவபெருமானால் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரின் பிணத்தை எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஓடினார்


அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார். தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாதசிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார். இதனால் தான் சிவன் சாம்பல் நிறத்துடையான் என்று போற்றப்படுகின்றார்.


சர்வ சங்காரகாலத்தில் பிரமன், திருமால் போன்றோர் உட்பட அனைவரின் உடல்களும் அவரவர் ஆட்சி செய்த உலகங்களும் அனைத்தும் எரிந்து சாம்பலாகும்.


உமையம்மையும் சிவனுள் கரந்து விடுவாள். தனித்து நிற்பவன் சிவன் ஒருவனே. எரிந்த சாம்பல் முழுவதும் சென்றுபடிவதற்கு வேறு இடம் இல்லாதபடியினால் சிவபெருமான் திருமேனியிலேயே படியும். சர்வ சங்காரத்தின் பின்னும் உலகுக்குச் சிவனே சார்பு என்பதையே ‘சுடலைப் பொடி பூசி’ என்னும் தொடர் உணர்த்துகின்றது.


இந்தச் சாம்பல் ஆதி நீறு எனப்படும். இந்த ஆதி விபூதியை, நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில், ‘மதுகையால் நீறணிந்து” என்று புகழ்ந்தார். திருநீறே சங்க இலக்கியத்தில் வெளிப்படும் முதற் சமயச்  சின்னம்.


இன்னொரு விபூதியும் உண்டு. அது அனாதி விபூதி எனப்படும். அது இறைவன் மேல் இயல்பாக உள்ள திருநீறு. நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும்.


வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை.


அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும்.


திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.


இதனைத் திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் ‘பராவண மாவது நீறு’ என்று ஓதியருளினார்.


பரன் என்பதற்குப் பெண்பால் பரை. பரையாகிய சிவசத்தியின் வண்ணமே திருநீறு. திருநீறு அணிதல் சிவசத்தியாகிய சிவனருளுடன் கூடியிருத்தலை உணர்த்தும்.


படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார்.


சைவம் தமிழகத்தில் வளர்ந்த வரலாற்றையும், சைவமானது பவுத்த சமணங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள வேதப்புறம்பான காபாலம், மாவிரதம், பாசுபதம், காளாமுகம் முதலிய நெறிகளைத் தழுவி ஏற்றுக் கொண்ட உண்மையையும் விளக்குவனவாகும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்    திருச்சிற்றம்பலம்.


பகிர்வு : மோகனா  செல்வராஜ் 


நன்றி. ஓம் நமசிவாய