இன்று முதல் ஒரே நாடு..ஒரே ரேஷன் கார்டு..திட்டம்


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது.


ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருக்கும் ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று அழைக்கப்படுகிறது.


தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.


இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1ந்தேதியில் இருந்து பிப்ரவரி 29ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. 


இந்த திட்டம் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. 


தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15ந்தேதி முதல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 


தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதால் இதனை முறைப்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் இது உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில்: இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதனை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் இனி விரல் ரேகையை பதிவு செய்து தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்திலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக முதலமைச்சர் தெரிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.