கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல்

 தமிழகத்தில் திருவொற்றியூர், குடி யாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏக்கள், கன்னியாகுமரி எம்.பி. ஆகியோரது மறைவு காரணமாக அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.


அதேநேரம், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு வரும் பிப்ரவரிக் குள் தேர்தல் நடத்த வேண்டும். சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடத்தப்படும் என்பதால், அதனுடன் சேர்த்து நடத்த இயலாது. எனவே, கன்னியாகுமரி தேர்தலை முன்னதாக நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மறைவை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.


தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுடன் அடுத்த வாரமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நவம்பர் 3-ம் தேதியும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.


வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இவ்வாறு உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுதெரிவித்தார்.