ஜிப்மரில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு

 



வரும் 2021 ஜனவரி முதல் ஜிப்மரில் மருத்துவப் பட்ட மேற் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றமடைகிறது. இதற்கான பொது நுழைவுத்தேர்வு நவம்பர் 20-ம் தேதி நாடு முழுவதும் எய்ம்ஸ் மூலம் நடக்கிறது. விருப்பமுள்ளோர் அக்.12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர்க்கை முறை, நடப்பாண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை முறையும் தற்போது மாறியுள்ளது.


இதுதொடர்பாகப் புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய சுகாதாரத் துறையின் உத்தரவுக்கு இணங்க வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல், மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎம் மற்றும் எம்சிஎச்) சேர்க்கையானது அனைத்துத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுக்கும் பொதுவாக நடைபெறும்.


இதற்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் 20-ம் தேதி டெல்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும்.


இதுபற்றி மேலும் விவரம் அறிய விரும்பினால்  www.aiimsexams.org இணையதளத்தை அணுகலாம். விருப்பமுள்ளோர் முறைப்படி வரும் அக்டோபர் 12 முதல் விண்ணப்பிக்கலாம்.


இப்போட்டித் தேர்வு தொடர்பாக அனைத்து விவரங்களும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.